வீர தீர சூரன் படப்பிடிப்பு இன்று தொடக்கம்
விக்ரம் நடிக்கும் 62 ஆவது படம் வீரதீரசூரன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வெற்றி பெற்ற‘சித்தா’ படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார்.இவர்களோடு எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு,சித்திக் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தொகுப்பை பிரசன்னா கவனிக்கிறார்.
இப்படம் குறித்த அறிமுகக் காணொலி அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து வெளியான ஒரு புகைப்படமும் வரவேற்புப் பெற்றது.அந்தப் புகைப்படத்தை நேராகப் பார்த்தால் விக்ரம் இரண்டு கைகளிலும் அரிவாளைப் பிடித்தபடி நிற்கிறார்.அதையே தலைகீழாகப் பார்த்தால் பத்து கைகளில் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் வெட்டப்பட்ட தலை ஆகியனவற்றைப் பிடித்திருக்கும் அம்மன் ஒளிப்படத்தின் முன்னால் விக்ரம் நிற்பதால் அவரே ஆங்காரம் கொண்டிருப்பது போல் தோன்றும்.
விக்ரமின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்று சாமி. ஹரி இயக்கிய அந்தப்படத்தின் முதல்பார்வையும் இப்படித்தான் இருந்தது.அதேபோல் இப்படத்தின் முதல் புகைப்படமும் அமைந்திருப்பதால் அப்படம் போலவே இப்படமும் பெருவெற்றி பெறும் என்று அவருடைய இரசிகர்கள் மகிழ்ச்சியுடன் சொல்லி வருகிறார்கள்.
இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகவிருக்கிறது. இதுவரை இல்லாத மாதிரி படத்தின் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிடுவதென்றும் முதல் பாகத்தை இரண்டவதாக வெளியிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.
இப்படத்துக்காக நடிகர் விக்ரம் முதன்முறையாக சுமார் நாற்பது கோடி சம்பளம் வாங்குகிறார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல இந்தப்படத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே.சூர்யா வாங்கும் சம்பளம் சுமார் ஒன்பதரை கோடி என்று சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
விரைவில் வெளிவரவிருக்கும் தங்கலான் படம் போன்றே இந்தப்படமும் விக்ரமின் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.
மதுரையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.படம் குறித்த அறிமுகக் காணொலி முதல்பார்வை புகைப்படம் ஆகியனவற்றை ஏற்கெனவே வெளியிட்டுவிட்டதால் படப்பிடிப்பு தொடங்குவது குறித்து எவ்விதத் தகவலும் சொல்லாமல் படப்பிடிப்பைத் தொடங்குகிறார்கள்.










