சினிமா செய்திகள்

கார்டியன் மூடநம்பிக்கைப் படமா? – இயக்குநர் குருசரவணன் நேர்காணல்

இயக்குநர் விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் கார்டியன். இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார்.

கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும் குருசரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

இப்படம் சர்வதேச மகளிர்நாளான மார்ச் 8 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதை திரைக்கதை வசனங்கள் ஆகியனவற்றை எழுதியதோடு இயக்குநர்களில் ஒருவராகவும் பணியாற்றியிருக்கும் இயக்குநர் குருசரவணனிடம் ஒரு நேர்காணல்.

1.உங்களைப் பற்றிய அறிமுகம்?

என் சொந்த ஊர் இராஜபாளையம்.சினிமா சம்பந்தப்படாத குடும்பத்திலிருந்து வந்தவன், நான் சின்ன வயதிலிருந்தே கவிதைகள், சிறுகதைகள் எழுதுவேன். அவை குமுதம், குங்குமம் உள்ளிட்ட பல முன்னணி வார இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.தென்றல், வானவில் என்கிற பெயர்களில் கையெழுத்துப் பத்திரிகைகள் நடத்தியிருக்கிறேன்,நாடகங்களில் பங்கேற்றிருக்கிறேன். சினிமாவில் சேரவேண்டும் என்று சென்னை வந்து ரொம்ப கஷ்டப்பட்டேன்.இயக்குநர் கே.எஸ்.இரவிகுமார் சார் ஆபிசில் முதன்முறையாக உதவி இயக்குநர்களுக்கான இண்டர்வியூ நடந்தது. அந்த இண்டர்வியூதான் முதலும் கடைசியும். அதில் நான் தேர்வானேன். அவரிடம் பல படங்களில் பணியாற்றினேன். கூகுள்குட்டப்பா படத்தின் மூலம் இயக்குநராக ஆனேன். மனைவி பூர்ணிமா,ஒரு குழந்தை. பெயர் தர்ஷா. இதுதான் என்னைப் பற்றிய அறிமுகம்.

2.கார்டியன் படம் குறித்து..?

கார்டியன் படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் விஜய்சந்தர் எனக்கு நல்ல அறிமுகம். அவருடன் கதை விவாதங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். நான் படத்தயாரிப்பில் இறங்குகிறேன், கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார்.கூகுள்குட்டப்பா முடிந்ததும் வேறொரு படம் செய்யத் திட்டமிட்டு வேலைகள் செய்துகொண்டிருந்தேன். முதலில் கதை மட்டும் தருகிறேன் என்று தான் வந்தேன். கதை அவருக்கும் ஹன்சிகாவுக்கும் பிடித்துவிட்டதால் நீங்களே இயக்குங்கள் என்றார்கள். சரி என ஒப்புக்கொண்டேன். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியனவற்றை நான் எழுதிவிட்டேன். கூகுள்குட்டப்பா போலவே இந்தப்பட இயக்கத்தை சபரியுடன் இணைந்து செய்திருக்கிறேன்.

3.⁠ஹன்சிகாவை பேயாக எப்படி நினைக்க முடிந்தது?

இந்தக்கதை ஒரு ஆணை மையப்படுத்தி இருந்தது. அதைப் பெண்ணாக மாற்றி ஹன்சிகாவுக்காகச் சில விசயங்களைச் சேர்த்தேன்.

4.⁠தயாரிப்பாளரும் ஓர் இயக்குநர். படைப்பில் அவர் தலையீடு இருந்ததா?

என் முதல்படத் தயாரிப்பாளர் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்தானே.அவர் என் குருநாதரும் கூட.அவருடைய தயாரிப்பில் முதல்படம் இயக்கும் வாய்ப்பு அமைந்தது. இந்தப்படத் தயாரிப்பாளர் விஜய்சந்தரும் ஓர் இயக்குநர். ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி திருப்திப் படுத்துவதை விட இயக்குநரிடம் கதை சொல்லி சம்மதம் வாங்குவது சவாலானது.ஆனால் இருவருமே என்னைத் தெரிந்தவர்கள்,அவர்களைப் பற்றியும் எனக்குத் தெரியும் என்பதால் எந்தச் சிக்கலும் இல்லாமல் படம் தொடங்கியது.திரைக்கதை மற்றும் காட்சிகள் குறித்த அவர்களுடைய கருத்து சொல்வார்கள்.அது சரியென்றால் ஏற்பேன், மற்றபடி, அவர்கள் தலையீடு எந்த இடத்திலும் இல்லை.

Guardian Working Still

Guardian Working Still

5.படப்பிடிப்பு அனுபவங்கள்..?

நல்ல அனுபவங்கள். காலை ஏழு மணிக்கு படப்பிடிப்பு தொடங்குவது என்பது உள்ளிட்ட பல விசயங்களை குருநாதர் போலவே கடைபிடித்தோம். ஹன்சிகா மேடம்,ஸ்ரீமன் சார்,தங்கதுரை, மொட்டைராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.ப்ளாஷ்பேக்கில் வரும் ஒரு அம்மா பொண்ணு ஆகிய இருவேடங்களில் புதியவர்களை நடிக்க வைத்திருக்கிறோம்.படப்பிடிப்பில் அடிபட்ட நேரத்திலும் படப்பிடிப்பு தடைபடக்கூடாது என்று வலியைப் பொறுத்துக் கொண்டு நடித்தார் ஸ்ரீமன் சார்.வேறு யாராக இருந்தாலும் அப்படிச் செய்யமாட்டார்கள். அது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம்.

6.மகளிர் தினத்தில் படம் வெளியாவது குறித்து?

இது எதார்த்தமாக அமைந்தது.இப்படம் பெண்களின் நலன், பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் உரிமை ஆகியனவற்றைப் பேசும். பெண்களை மையப்படுத்திய அவர்களைப் போற்றக்கூடிய படமாக இது இருக்கும். படம் பார்க்கும்போது நீங்கள் இதை உணர்வீர்கள்.

7.இரண்டாவது படத்திலும் சபரியுடன் இணைந்து இயங்குவது பற்றி? இது தொடருமா?

ஆம், இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றிவிட்டோம்.அடுத்து தனியாக இயக்கும் திட்டம் இருக்கிறது. காலம்தான் தீர்மானிக்கும்.

8.முதல்படம் நவீன அறிவியல், இரண்டாவதுபடம் மூடநம்பிக்கை. ஏன் இந்த முரண்?

முதல்படம் சயின்ஸ் ஃபிக்‌ஷன், இந்தப்படம் ஹாரர் த்ரில்லர் என்றுதான் நான் பார்க்கிறேன். மூடநம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமல்ல. கூகுள்குட்டப்பா வில் ஒரு மனிதருக்கும் இயந்திரத்துக்குமான உணர்வுப்பூர்வமான உணர்வைச் சொல்லியிருப்போம். இந்தப்படத்திலும் அம்மா மகள் உறவு குறித்து உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறோம்.

9.இரண்டு படங்களிலும் கதைதான் நாயகன். கதாநாயகர்களை வைத்து இயக்கும் எண்ணமில்லையா?

இரண்டாவது படமே ஒரு ஹீரோவை வைத்து இயக்குவதுதான் திட்டம். இப்போது அடுத்த படத்தை அப்படித்தான் எடுக்கவிருக்கிறேன்.ஹீரோ படமென்றாலும் அதிலும் கதைதான் நாயகன் என்பது என் கருத்து.கதை எழுதிவிட்டு அதற்கேற்ற நாயகனைத்தான் நான் தேடுகிறேன்.அந்தக் கதை அந்த நாயகனுக்கும் நல்ல பெயர் பெற்றுத்தரும்.

10. அடுத்து..?

அடுத்து ஒரு ஹீரோ படம் என்பதால் அவர் வருவதற்காகக் காத்திருக்கிறேன். விரைவில் அடுத்த படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

– அன்பன்

Related Posts