Uncategorized சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ரஜினி செய்த புகார் – லால்சலாம் சலசலப்பு

ரஜினிகாந்த் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைக்கதை இயக்கத்தில் வெளியான படம் லால்சலாம்.இப்படத்தில், விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாகவும், ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்திலும் நடித்திருந்தார்கள்.

லால்சலாம் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியானது.

படம் வெளியானவுடன் படத்தில் பேசப்பட்டிருக்கும் மத நல்லிணக்கம் எனும் கருத்துக்காகவும் அதை முன்னணி நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்காகவும் வரவேற்புப் பெற்றது.

அதேசமயம்,திரைப்படக்கலை வடிவில் பார்த்தால் இது ஒரு முழுமையான திரைப்படமாக இல்லை,திரைக்கதையில் பல குழப்பங்கள், எனவே படம் பார்க்க முடியவில்லை என்று வெகுமக்கள் விமர்சனம் செய்தனர்.

மதநல்லிணக்கம் பேசியதற்காக வரவேற்றவர்கள் கூட, இப்போதுதான் இராமர்கோயில் திறப்புவிழாவுக்குப் போய் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுடன் கைகுலுக்கிவிட்டு வந்தார் ரஜினிகாந்த்.இதுமட்டுமின்றி தொடர்ந்து இதுபோன்ற பல செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவர் திரையில் மதநல்லிணக்கம் பேசுவது ஏற்றுகொள்ளும்படி இல்லை என்று கடுமையாகக் கருத்துத் தெரிவித்தனர்.

இப்படிப் படம் பற்றிய கருத்துகள் பலவிதமாக இருந்தாலும், வசூலைப் பொறுத்தவரை முதல்நாளிலிருந்தே பெரிதாக இல்லை.

முழுமையான ரஜினிகாந்த் படம் என்பதுபோல் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும் படம் முழுக்க ரஜினிகாந்த் வருகிறார் எனும் செய்தி முதல்காட்சியிலேயே வெளிவந்தும் வசூல் கூடவில்லை.

இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் அப்படத்தின் மொத்த வசூலில் தயாரிப்பாளரின் பங்கு சுமார் ஏழரையிலிருந்து எட்டுக்கோடிக்குள் வருமென்று சொல்கிறார்கள்.இதனால் வியாபார வட்டத்தினர் கடும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ரஜினிகாந்த்,ஏ.ஆர்.ரகுமான் போன்ற பெரிய கைகள் இருந்தும் படத்தின் வசூல் இவ்வளவு குறைவாகியிருக்கிறதே என்கிற அதிர்ச்சிதான் அது.

இப்படத்தின் தயாரிப்புக்கு ஆன மொத்தச் செலவு சுமார் எண்பது கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் சம்பளம் மட்டும் நாற்பது கோடி என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வளவு செலவு செய்து எடுத்த படத்துக்கு திரையரங்க வசூல் இவ்வளவு குறைவாக இருந்ததால் படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

இந்த நேரத்தில் இலண்டனிலுள்ள லைகா நிறுவனர் சுபாஷ்கரனிடம், படத்துக்கு எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இங்குள்ளோர் படத்தை விளம்பரப்படுத்துவதைச் சரியாகச் செய்யவில்லை,அதனால் வசூல் இல்லாமல் போயிவிட்டது என்று புகார் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இதைக்கேட்ட அவர், இங்குள்ள விளம்பரப் பொறுப்பாளர்களைக் கடிந்து கொண்டாராம்.

இப்படம் அறிவித்த நாளிலிருந்து கடுமையாக உழைத்த எங்களுக்கு இதுதான் பரிசா? என சம்பந்தப்பட்டோர் வருந்திக் கொண்டிருக்கிறார்களாம்.

Related Posts