சினிமா செய்திகள்

கவின் இப்படிச் செய்யலாமா?

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிகரமான நடிகராக உலாவருபவர் கவின். இப்போது அவர், இளன் இயக்கத்தில் ஸ்டார், நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படம் மற்றும் இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவை இருக்கின்ற நேரத்தில் அவரைத் தேடி பல புதியபட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

இதனால், நடிகை நயன்தாராவுக்கு மேலாளராக இருக்கின்ற குபேந்திரன் என்பவரை தனக்கு மேலாளராக நியமித்திருக்கிறார் கவின்.

கவினை வைத்துப் படம் எடுக்கவேண்டுமென நினைப்பவர்கள் படம் இயக்க விரும்புவர்கள் அவரைத்தான் தொடர்பு கொள்ளவேண்டும்.

அண்மையில் ஒரு பெரியதயாரிப்பு நிறுவனம் சார்பில், அவரைத் தொடர்பு கொண்டு புதியபடம் சம்பந்தமாகப் பேசியிருக்கிறார்கள்.

அந்நிறுவனத்தினர் ஒரு கதை கேட்டதாகவும் அதில் கவின் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால் உங்களைத் தொடர்பு கொள்கிறோம் என்று குபேந்திரனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு குபேந்திரன் சொன்ன பதிலால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

அப்படி அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

கதை குறித்துப் பிறகு பேசிக்கொள்ளலாம், இப்போது கவின் சம்பளம் ஆறு கோடி இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் வெளியானால் இன்னும் அதிகமாகும். எனவே, இப்போதைய சம்பளப்படி முதலில் இரண்டு கோடி முன்பணம் கொடுங்கள். அதன்பின் கதை மற்ற விவரங்கள் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். அதுமட்டுமின்றி மீதித் தொகையை எப்போது? எப்படி? கொடுக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

சம்பளம் மட்டுமில்லை, கவின் படப்பிடிப்புக்கு வரும்போது எந்தமாதிரியான கேரவன் வைக்க வேண்டும், எம்மாதிரியான உணவுவகைகள் இருக்கவேண்டும், எந்த வண்டி அனுப்பவேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகளையும் சொல்லியிருக்கிறார்.

இதுதான் தயாரிப்பு நிறுவனத்தின் அதிர்ச்சிக்குக் காரணம்.

ஏனெனில், கவின் டாடா படத்துக்கு வாங்கிய சம்பளம் இரண்டு இலக்க இலட்சங்களில்தான். டாடா வெற்றி என்றதும் ஒன்றரைகோடி இரண்டு கோடி என்று சம்பளத்தை உயர்த்திவிட்டார்.

இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நம்பிப் போயிருக்கிறார்கள். ஆனால் இப்போது வாங்கும் சம்பளத்தைவிட மும்மடங்கு அதிகம் என்பதோடு விதிக்கப்பட்ட நிபந்தனைகளையும் கேட்டுத்தான் அதிர்ச்சியாகியிருக்கிறார்கள்.

இதெல்லாம் கவின் சொல்லித்தான் நடக்கிறதா? அல்லது நான் உங்களைப் பெரிய ஆளாக ஆக்கிக்காட்டுகிறேன் என்று சொல்லி குபேந்திரனே இதைச் செய்கிறாரா? என்பது தெரியாமல் வருந்துகிறார்கள்.

யார் செய்தாலும் இது கவினுக்கு நல்லதல்ல என்பதே பெரும்பான்மையினரின் கருத்து.

Related Posts