பல தெலுங்குப் படங்களில் நடித்தும் தெலுங்கு கற்காதது ஏன்? – சத்யராஜ் விளக்கம்
அரிமாநம்பி, இருமுகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த்சங்கர் இயக்கத்தில் தெலுங்குநடிகர் விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இப்படத்திற்கு நோட்டா என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்தப் படத்தின் முதல்பார்வை மார்ச் 8, 2018 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்றது.
இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடீக்கும் நடிகர் சத்யராஜ் பேசுகையில்,
ஞானவேல்ராஜாவின் அப்பா எம்ஜிஆர் ரசிகன். அதனால் எம்ஜிஆர் ரசிகரின் மகன் தயாரிக்கும் படத்தில் நான் முதன்முதலாக நடிக்கிறேன். இயக்குநர் ஆனந்த் சங்கர், எழுத்தாளர் கோமல் சுவாமிநாதனின் பேரன். கோமல் சுவாமிநாதன் எழுதி அரங்கேற்றிய ‘கோடுகள் இல்லாத கோலங்கள் ’ என்ற நாடகத்தில், சிவக்குமார் அவர்களின் சிபாரிசில் நடித்திருக்கிறேன். அதற்காக அவர் எனக்கு முப்பது ரூபாய் சம்பளமாக கொடுத்தார். அதில் பத்து ரூபாய்க்கு இனிப்பு வாங்கி சிவக்குமார் வீட்டிற்கும், மற்றொரு பத்து ரூபாயை நான் எம்ஜிஆரின் ரசிகன் என்பதால் முகம் தெரியாத ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டேன். மற்றொரு பத்து ரூபாயை என்னுடைய வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கிறேன். இப்போது அவருடைய பேரன் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரேயொரு விசயத்தை நான் சொல்லிவிடுகிறேன். இந்த நோட்டா என்ற தலைப்பை நான் சொல்லவில்லை. அவர்களாகவே யோசித்து வைத்தது. இதைவிடப் பொருத்தமான கவர்ச்சியான டைட்டிலை வைக்க முடியுமா எனத் தெரியவில்லை. இந்தப்படத்தில் நான் பத்திரிக்கையாளர் ஞானியை போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். இதற்கான கெட்டப் புதிதாக இருக்கிறது.
நான் பத்து தெலுங்குப் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தெலுங்கைக் கற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் தெலுங்குப் படத்தில் உள்ள நாயகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்கிறது. அதனால் படப்பிடிப்பிற்கு இடையே தெலுங்கைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேபோல் பழைய படங்களில் 75 சதவீதம் கதை. 25 சதவீதம் தான் தொழில்நுட்பம் இருக்கும். இன்று 25 சதவீதம் தான் கதை. 75 சதவீதம் தொழில்நுட்பம் இருக்கிறது. இன்று ஒரு கதையை எப்படி எடுத்துக் காண்பிக்கவிருக்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் சங்கர் அரிமா நம்பி, இருமுகன் என இரண்டு படங்களில் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் இந்த இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்’என்றார்.











