சிக்கலில் விஜய்சேதுபதி நடிக்கும் இணையத்தொடர் – விவரங்கள்
வரிசையாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் இணையத்தில் மட்டும் வெளியிடுவதற்கென்றே எடுக்கப்படும் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.தொடக்கத்தில் இந்தியில் இணையதளத் தொடர்களில் நடித்த அவர் தற்போது தமிழில் தயாராகும் இணையத் தொடரில் ஒன்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்தத் தொடரை, ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படைப்புகளைத் தந்த இயக்குநர் எம்.மணிகண்டன் இயக்குகிறார்.
இந்த இணையத்தொடரை ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக 7 சிஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் பி.ஆறுமுககுமார் தயாரிக்கிறார்.
இந்த இணையத்தொடருக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார், சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார்.
பி.அஜித் குமார் படத்தொகுப்பாளராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.இதன் ஒலி வடிவமைப்பை அஜயன் கே.அடாத் மேற்கொள்கிறார்.இத்தொடரின் உடை வடிவமைப்பை கவிதா கையாள்கிறார்.
இதன் படப்பிடிப்பு மார்ச் 31 அன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான பூசையுடன் தொடங்கியது.
அப்போது தொடங்கிய படப்பிடிப்பு விஜய்சேதுபதி கொடுத்த தேதிகளையொட்டி வேகமாக நடந்திருக்கிறது.
இப்போது அதன் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறதாம்.
அதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது என்னவென்றால்? விஜய்சேதுபதியின் தேதிகள் கிடைக்கவில்லை.அவர் அடுத்தடுத்து படங்களுக்குத் தேதி கொடுக்கவேண்டிய நெருக்கடிக்கு ஆளானதால் இந்தத் தொடருக்குத் தேதி தரவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆனால், இத்தொடரைத் தயாரிக்கும் ஹாட்ஸ்டார் நிறுவனம் பணம் கொடுப்பதை நிறுத்தி வைத்திருப்பதால் படப்பிடிப்பு நடத்தவியலாத நிலை என்று சொல்கிறார்கள்.
அவர்கள் பணம் தர மறுக்க என்ன காரணம்?
இதுவரை கொடுத்த பணத்தை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் இவ்வளவு இருக்கவேண்டும், அதனால் ஓரிரு எபிசோட் என்று சொல்லப்படுகிற பகுதிகளைத் தொகுத்துக் காட்டுங்கள் என்று கேட்கிறார்களாம்.
அதைச் செய்து தர மறுக்கிறாராம் இயக்குநர் எம்.மணிகண்டன்.
இதற்கு என்ன காரணம்?
இதுவரை எடுத்த காட்சிகள் நீளப்படுத்திப் பார்த்தால் இரண்டுக்கும் மேற்பட்ட பகுதிகள் இருக்கும்.ஆனால், படப்பிடிப்புக்கு விஜய்சேதுபதி வந்த நாட்களில் அவரை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததால், அவர் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றைப் படமாக்கியிருக்கிறாராம் மணிகண்டன்.
அதனால் பகுதி பகுதியாகத் தொகுக்கவியலாத நிலை. இதை வெளிப்படையாகச் சொல்லாமல், நீங்கள் கேட்கிற மாதிரியெல்லாம் செய்யவியலாது என்று சொல்வதால், ஹாட்ஸ்டார் நிறுவனமும் பணம் தருவதில் தாமதம் செய்கிறதாம்.
இதற்கிடையே இருதரப்பையும் சமரசம் செய்து படப்பிடிப்பைத் தொடங்கும் வேலைகளில் சிலர் இறங்கியிருக்கிறார்களாம்.
சமரசம் ஏற்படவும் விஜய்சேதுபதி தேதிகள் கிடைப்பதும் சரியாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.











