அருள்செழியன் இயக்கும் குய்கோ – முதல்பார்வையை வெளியிட்டார் விஜய்சேதுபதி

விகடன் குழுமம் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றிப் பத்திரிகையாளராகப் புகழ்பெற்றவர் அருள்செழியன்.இவர் திரைத்துறைக்குள் வந்து,எம்.மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி,யோகிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆண்டவன்கட்டளை திரைப்படத்தில் திரைக்கதை வசனம் எழுதினார்.
அதன்பின்,விதார்த், யோகிபாபுவை ஆகியோரைக் கதாநாயகர்களாக வைத்து ஒரு படத்தை எழுதி இயக்கியுள்ளார். படத்தின் பெயர் குய்கோ. குடியிருந்தகோயில் என்பதன் மக்கள்வழக்குதான் இப்பெயர்.இப்படத்தில் சாய்பிரியங்கா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்துக்கு ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடகராகப் புகழ்பெற்றிருக்கும் ஆண்டனிதாசன் இசையமைத்துள்ளார்.ராம்பாண்டியன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார்.

kuiko
காதல், தாய்ப்பாசம் ஆகியனவற்றிற்கு முக்கியத்துவம் உள்ள கதையை நகைச்சுவை அம்சம் கலந்து சொல்லியிருக்கிறார்களாம்.
இப்படத்தை ஏஎஸ்டி ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை இன்று காலை 11 மணிவாக்கில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.
அவருடைய சமூகவலைதளப் பக்கத்தில் இதை அவர் வெளியிட்டுள்ளார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அவருடைய பதிவில் விரைவில் இப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இப்படத்தைத் தீபாவளிக்கு அடுத்த சரியான தேதி ஒன்றைத் தேர்ந்தெடுத்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
அருள்செழியன் எழுத்தாளராக இருந்த ஆண்டவன்கட்டளை படம், விஜய்சேதுபதியின் வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. முதல்படத்திலேயே வெற்றியைச் சுவைத்த அருள்செழியன், அந்தப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்திருந்த யோகிபாபுவை முதன்மை நாயகனாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படமும் வெற்றி பெறும் என்று நம்பிக்கையாகச் சொல்கிறது படக்குழு.