வெங்கட்பிரபு ஆர்யா ஆகியோருக்கு இது தெரியுமா? – கருப்பர்நகரம் சர்ச்சை
நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அறம். இப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.இந்தப் படத்தை இயக்கியவர் கோபிநயினார்.
அதன்பின் அவருடைய இயக்கத்தில் கருப்பர் நகரம் என்றொரு படம் தயாராகியுள்ளதாகவும், ஜெய்,ஐஸ்வர்யாராஜேஷ் மற்றும் ஜேடிசக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ள அந்தப்படத்தின் முதல்பார்வையை இன்று மாலை ஐந்து மணிக்கு நடிகர் ஆர்யா வெளியிடவிருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறம் படத்துக்குப் பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா முதன்மைவேடத்தில் நடிக்கும் மனுஷி என்கிற படத்தை கோபிநயினார் இயக்குகிறார் என்று செய்திகள் வந்தன.
இதற்கிடையே இந்தப்படத்தை எப்போது எடுத்தார்?
இந்தப்படம்தான் கோபிநயினாரின் முதல்படம்.2014 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.அதற்கு முன்பாகவே,கதை விவாதம் உள்ளிட்ட முன் தயாரிப்புப்பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப்படத்தின் கதைவிவாதத்தில் கோபிநயினாருடன் பா.இரஞ்சித்தும் இருந்திருக்கிறார்.
அதன்பின் பா.இரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படம் வெளியானது. அது கருப்பர்நகரத்தின் கதையைக் காப்பியடித்து எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை கோபிநயினார் வைத்தார்.
கருப்பர் நகரம் படம் முழுமையடையாமல் நின்றுபோய்விட்டது.அப்போது இந்தப்படத்துக்கு இசை ஸ்ரீகாந்த்தேவா. இந்தப்படத்தில் ஐஸ்வர்யாராஜேஷ் சில நாட்கள் மட்டுமே நடித்திருந்தார்.அப்போது அவருக்குப் பேசப்பட்ட குறைவான சம்பளத்தையும் முறையாகக் கொடுக்கவில்லை என்பது உட்பட சில காரணங்களால் அந்தப்படத்தில் தொடர்ந்து நடிக்க அவர் விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது.
இதுதொடர்பாக கோபிநயினார்,ஐஸ்வர்யாராஜேஷ் மீது குற்றம் சுமத்த, அதற்கு ஐஸ்வர்யாராஜேஷ் கொடுத்த பதில்களைக் கேட்டு, கோபிநயினார் செய்ததுதான் தவறு மேற்கொண்டு ஐஸ்வர்யாராஜேஷை அவர் வற்புறுத்தக் கூடாது என்று மத்தியஸ்தம் செய்தவர்கள் சொன்னதாகவும் தகவல்கள் உண்டு.
இது நடந்தே சில ஆண்டுகள் ஆகிவிட்டன.
இப்போது மீண்டும் இந்தப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கோபிநயினார்.
மீண்டும்,ஜெய், ஐஸ்வர்யாராஜேஷ் ஆகியோரை வைத்து படப்பிடிப்பு நடத்தினாரா? என்றால் இல்லையாம். முதலில் நடத்திய படப்பிடிப்பில் உள்ள காட்சிகளைக் கொண்டு படத்தைத் தொகுத்திருக்கிறார் என்கிறார்கள்.
இதனால், அப்போது நடித்த ஜெய்,ஐஸ்வர்யாராஜேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் இப்போது படத்தை வெளியிடுவது குறித்து எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை என்கிறார்கள்.
இதனால் சம்பந்தப்பட்டவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
இந்த விவரம் எல்லாம் கருப்பர்நகரம் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் வெங்கட்பிரபு முதல்பார்வையை வெளியிடும் ஆர்யா ஆகியோருக்குத் தெரியுமா? தெரியாமல் செய்கிறார்களா? எனத் தெரியவில்லை.











