விமர்சனம்

மோடியின் புதிய திட்டத்தை எதிர்க்கும் தமிழ்க்குடிமகன் – விமர்சனம்

சில நாட்களுக்கு முன் அதாவது ஆகஸ்ட் 15 ஆம் நாளில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திரநாள் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி,விஸ்வகர்மா என்றொரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகவும் அதன்படி, அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 இலட்சம் பேர் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்றார்.

அடுத்தநாளே, 16.8.2023 அன்று ‘‘பி.எம். விஸ்வகர்மா’’ (PM Viswakarma’) திட்டம் என்பதை அமைச்சரவையின் பொருளாதாரக் குழு ஏற்று 13,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பள்ளிக்கூடங்களுக்குப் பதிலாக குரு – சிஷ்ய பரம்பரைக் கல்விப் பயிற்சி. 2023-2024 முதல் 2027-2028 வரை இத்திட்டப்படி குலத் தொழிலை செய்ய அவரது வாரிசுகளுக்கு, குடும்பத்தினருக்கு கற்றுக் கொடுப்பார்கள். அதற்கு இந்த 13,000 கோடி ரூபாய்.18 பாரம்பரிய குலத் தொழிலை அடையாளம் கண்டுள்ளார்கள்.

தச்சுத் தொழில், படகு செய்தல், கருமான் பட்டறைத் தொழில், குயவன் மண்பாண்டத் தொழில், சுத்தி முதல் துடைப்பம் – விளக்குமாறு கட்டும் தொழில் (Broom Maker), பொம்மை செய்தல், சிகை திருத்தும் தொழில்(Barber), கைத்தறித் தொழில், பூக்கட்டும் தொழில், சலவைத் தொழில், தையல் தொழில், மீன் பிடித் தொழில் முதலியன இத்திட்டத்தில் வருகிறது. இதனைச் செய்யப் பழகுவோருக்கு ஒரு இலட்சம் ரூபாய் முதல் 2 இலட்சம் ரூபாய் வரை மானிய அடிப்படையில் கடன் அளிப்பார்கள்.

இதுதான் மோடி சொன்ன விஸ்வகர்மா திட்டம்.

இதற்கு நேரெதிரான படமாக வந்திருக்கிறது தமிழ்க்குடிமகன்.

ஒரு கிராமத்தில் சலவைத்தொழில் மற்றும் மயானத்தில் உடலடக்கம் செய்வது ஆகியனவற்றைச் செய்துவரும் ஒருவர், அதைச் செய்ய மறுப்பதும் அதனால் ஏற்படும் சிக்கல்களுமே படத்தின் அடிப்படை.

தன் தொழிலுக்குரிய மரியாதை இல்லாமல் போவதால் அதைச் செய்யமறுத்து அரசு வேலைக்கு முயலும் சின்னசாமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேரன், கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஊரார் முன் அடங்கி ஒடுங்கி நிற்பதும் வீட்டில் குமுறுவதும் அவருக்குச் சரியாக அமைந்திருக்கிறது.இதுபோன்றதொரு கதையைத் தேர்வு செய்தது அவரிடமிருக்கும் சமுதாயஅக்கறையை உணர வைக்கிறது.

ஆதிக்கசாதிக்காரராக நடித்திருக்கும் லால், அவர்களுக்குரிய இறுமாப்புடன் இருக்கிறார்.

வேலராமமூர்த்தி, எஸ்.ஏ.சந்திரசேகர், அருள்தாஸ், சுரேஷ்காமாட்சி ஆகியோரும் அவரவர் வேடத்தை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

சேரனின் மனைவியாக வரும் ஸ்ரீபிரியங்கா, தங்கையாக வரும் தீபிக்‌ஷா ஆகியோரும் குறைவில்லை.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் நன்று.

ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு,படத்தில் வசனங்கள் அதிகம் என்றாலும் காட்சிகளில் குறைவின்றி திரைக்கதையை உயர்த்திப் பிடித்து உதவியிருக்கிறது.

குலத்தொழிலை விரும்பாதவர்கள் அந்தச் சாதி அடையாளத்தை விரும்பாதவர்கள் இப்படிச் செய்து கொள்ளலாம் என்று இயக்குநர் ஒரு தீர்வைச் சொல்கிறார். அது விவாதத்துக்குரியது.

சனாதனம் குறித்த விவாதங்கள் தீவிரமாக இருக்கும் இந்நேரத்தில் சனாதன எதிர்ப்பாளர்களுக்கு ஒரு ஆயுதமாக இந்தப்படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் இசக்கிகார்வண்ணன்.

– குமரன்

Related Posts