கருமேகங்கள் கலைகின்றன – திரைப்பட விமர்சனம்
உறவுகளின் மேன்மைகள் பேசிப்பேசித் தீர்பவை அன்று வளர்ந்து வளர்ந்து நெக்குருக வைப்பவை. அவற்றைக் கையாள்வதில் தேர்ந்தவர் தங்கர்பச்சான். இந்தப்படத்திலும் அந்த மாயத்தை நிகழ்த்தி நெகிழ வைக்கிறார்.
அவருக்குத் தோதாக பாரதிராஜா, கவுதம்மேனன், யோகிபாபு, அதிதிபாலன், சாரல் ஆகியோர் அமைந்திருக்கிறார்கள்.
பொருளியலில் உச்சாணியில் இருக்கும் பாரதிராஜாவும் அதைத்தேடி ஓடிக்கொண்டிருக்கும் யோகிபாபுவும் ஒரு பயணத்தில் இணைவதில் தொடங்கும் படம், பயணங்கள் தரும் வியப்புகளைத் தந்து கொண்டே போகிறது.
வயது மூப்பின் தளர்ச்சி அங்கங்கே தெரிந்தாலும், கர்ஜனையில் தன்னை வெளிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார் பாரதிராஜா. அறம் பிறழ்ந்த மகனிடம் சீறும் காட்சியே சான்று.
தோற்றத்தில் நவநாகரிக மனிதர், உள்ளத்தால் உயரம் குன்றியவர் வேடத்துக்குக் கனகச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் கவுதம்மேனன்.
எளியமக்களின் பிரதிநிதியாக வருகிறார் யோகிபாபு. அவருடைய வேடமும் நடிப்பும் படத்துக்குப் பலம்.
அதிதிபாலனின் கதாபாத்திரம் பிழை செய்தோரின் நெஞ்சில் அறைகிறது. அதைத் தேர்ந்த நடிப்பால் மெருகேற்றியிருக்கிறார் அவர்.
சிறுமி சாரல், மீனாகுமாரி, மோகனா சஞ்சீவி உட்பட படத்தில் வரும் பாத்திரங்களும் பக்கபலமாக அமைந்திருக்கின்றன.
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவில் பயணங்களும் கதாபாத்திரங்களின் பரிதவிப்புகளும் பார்வையாளனை ஊடுருவுகின்றன.
ஜீ.வி.பிரகாஷின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் இதமாக அமைந்திருக்கின்றன. பின்னணி இசையிலும் குறைவில்லை.
அதிவிரைவு உணவுக்காலத்தில் அவற்றின் வேகத்துக்கு ஓடி ஆரோக்கியக்குறைவு ஏற்படுத்திவிடாமல்,உடல்நலனுக்கு ஊக்கம் கொடுக்கும் அறுசுவையுடன் கூடிய விருந்து படைத்திருக்கிறார் தங்கர்பச்சான்.
– இளன்











