லியோ படத்தின் விலை – அதிரும் விநியோகஸ்தர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’.சஞ்சய்தத், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியானது.
இப்படம் ஆயுதபூசை விடுமுறையையொட்டி அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் வியாபாரம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கின்றனவாம்.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் வெளியிட ரெட்ஜெயண்ட் நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறதாம். அந்நிறுவனத்துக்குக் கொடுத்தால் அது விநியோக முறையில்தான் படத்தை வெளியிடும். எனவே மற்ற விநியோகஸ்தர்களிடம் விற்பனை செய்தால் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வியாபாரம் செய்யவியலும்.
எனவே,வாரிசு படம் போலவே ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கு ஓரிரு பகுதிகளைக் கொடுத்துவிட்டு மற்றவற்றை வேறு விநியோகஸ்தர்களுக்குக் கொடுத்துவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன்படி, வியாபாரம் சம்பந்தமான பேச்சுகள் தொடங்கியுள்ளது. படம் வாங்க வந்த விநியோகஸ்தர்களுக்குப் பேரரதிர்ச்சி அளிக்கும் வண்ணம் விலை சொல்லப்பட்டிருக்கிறது.
பொதுவாக விஜய் போன்ற சந்தைமதிப்புள்ள நடிகர்களின் முந்தைய பட வசூலை அடிப்படையாக வைத்தே அடுத்தபட வியாபாரம் அமையும். ஆனால், இந்தப்படத்தில் அப்படி நடக்கவில்லையாம்.
இந்தப்படத்துக்குத் தயாரிப்புத்தரப்பு சொல்கிற விலை காரணமாகப் படத்தை வாங்க எல்லோரும் தயங்குவதாகச் சொல்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு விநியோகப்பகுதியில் வாரிசு படம் எட்டு கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது என்றால் அங்கு அந்தத் தொகையே முழுமையாக வசூலாகவில்லை என்றும் முப்பது நாற்பது இலட்சம் வரை நட்டம் ஏற்பட்டது என்றும் சொல்லப்பட்டது.
அதே விநியோகப்பகுதிக்கு லியோ படத்துக்குச் சொல்லப்படும் விலை சுமார் பதினைந்து கோடியாம்.அதாவது வாரிசை விட இருமடங்கு. வாரிசு படமே முழுமையாக வசூலித்துத்தரவில்லை எனும்போது இந்தப்படத்துக்கு இவ்வளவு விலையா? என்று கேட்டால், அது தெலுங்குப் படம், இது நேரடித்தமிழ்ப்படம் என்பது மட்டுமின்றி இந்தப்படத்தை இயக்கியிருப்பது லோகேஷ்கனகராஜ். அதனால் இந்தப்படத்துக்கு இவ்வளவு விலை என்று தயாரிப்புத் தரப்பில் சொல்கிறார்களாம்.
இதனால், இந்தப்படத்தை வாங்குவதா? வேண்டாமா? என விநியோகஸ்தர்கள் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.இதே நிலை நீடித்தால், ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கே மொத்தமாக விநியோக முறையில் கொடுப்பதுதான் நடக்கும் என்கிறார்கள்.
பார்ப்போம்.











