தனுஷ் ஏமாந்தாரா? – மாரிசெல்வராஜ் பட அறிவிப்பால் எழுந்துள்ள கேள்வி
ஏப்ரல் 9,2023 அன்று முன்னிரவு 7.30 மணிக்கு தனுஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் (ZEE Studios) மற்றும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் (Wunderbar Films) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் பாராட்டுகளைக் குவித்து, வெற்றி பெற்ற ‘கர்ணன்’ திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இந்தப் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
நடிகர் தனுஷின் திரை வரலாற்றில், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளது. மேலும் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் இப்படம் மூலம் தயாரிப்பில், இறங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில், பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன், இயக்குநர் மாரிசெல்வராஜ் – தனுஷ் கூட்டணிக்குப் பெரும் வரவேற்பும் வுண்டர்பார் நிறுவனம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியதற்குப் பாராட்டும் தெரிவித்தவர்கள் இந்நிறுவனம் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்தது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
எதனால்?
ஜீ ஸ்டுடியோஸ் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இணைந்து வழங்குகிறது என்றாலே, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் பணம் போடுகிறது வுண்டர்பார் நிறுவனம் நிர்வாகம் செய்யும் என்பதுதான் பொருள். இதனால் இப்படத்தில் கிடைக்கும் இலாபத்தின் பெரும்பங்கை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் அடையும். இதுதான் எதிர்ப்புக்குக் காரணம்.
இக்கூட்டணியில் உருவாகும் படம், படைப்பு ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெறும் என்பதோடு வியாபார ரீதியாகவும் இலாபம் ஈட்டும் என்பதில் ஐய்யமில்லை. அப்படி ஓர் உறுதி இருக்கும் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதுதான் கேள்வி.
படம் எடுக்கத் தேவையான பணத்தை முதலில் போட தனுஷால் இயலாது என்பதால் ஜீ ஸ்டுயோஸை நாடியுள்ளார் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. ஏனெனில்,இந்தப் படத்தில் பெரிய செலவே நாயகனின் சம்பளம்தான். தனுஷே தயாரிப்பதால் அந்தச் சம்பளத்தை வியாபாரத்தின்போது எடுத்துக் கொண்டிருக்கலாம். இயக்குநர் மற்றும் மற்றவர்கள் சம்பளம், படப்பிடிப்பு செலவுகள் ஆகியனவற்றிற்குப் பணம் தேவையெனில் அதையும் உடனே முன்பணமாகத் தர வியாபாரிகள் தயாராக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது தனுஷ் ஏன் ஜீ ஸ்டுயோசிடம் கொடுத்தார்? என்று கேட்கிறார்கள்.
அவர் படம் அதை யாரிடம் கொடுப்பது என்பது அவருடைய விருப்பம்தானே என்று கேட்டால்?
அவருடைய நன்மைக்காகத்தான் இதைச் சொல்கிறோம். ஏற்கெனவே முத்தையா ஆர்யா கூட்டணியில் உருவாகும் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தயாரிப்பில் இணைந்துள்ள ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம், சொன்னபடி பணம் தராமல் இழுத்தடித்துவருகிறது. ஆனாலும் கடைசியில் கிடைக்கவிருக்கும் இலாபத்தில் மட்டும் ஒரு பைசா பாக்கியில்லாமல் அவர்கள் பங்கைப் பெற்றுக்கொள்வார்கள்.
இப்படியிருக்கும்போது தனுஷ் ஏன் அதற்குப் பலியாகவேண்டும்? என்பதுதான் எங்கள் கேள்வி என்கிறார்கள்.
ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏமாந்துள்ளாரா? அல்லது பெரிய இலாபம் சம்பாதிக்கப் போகிறாரா? என்பது போகப் போகத்தான் தெரியும்.











