சினிமா செய்திகள்

நினைத்ததை நடத்திய சிம்பு – நலம்விரும்பிகள் உற்சாகம்

சிம்புவின் 48 ஆவது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தேசிங்குபெரியசாமி இயக்குகிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப்போவது வேறு இயக்குநர்கள், தயாரிக்கப்போவது வேறு தயாரிப்பு நிறுவனங்கள் என்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ராஜ்கமல் நிறுவனத்தில் அவர் நடிப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது எப்படி நடந்தது? என்கிற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

அதற்கான விடையும் வெளிவந்திருக்கிறது.

பல தோல்விகளுக்குப் பின் உடல் எடையைக் குறைத்து சிம்பு நடித்த படம் ஈஸ்வரன். அந்தப்படத்தின் வியாபாரத்தின்போது சம்பளம் வாங்கிக் கொள்வதாக ஒப்புக்கொண்டு நடித்தார் சிம்பு. ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பு சொன்னபடி நடந்துகொள்ளாமல் அவரை ஏமாற்றியதாகச் சொல்லப்பட்டது.

அதன்பின் அவர் நடிப்பில் வெளியான மாநாடு படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் சுமார் இரண்டரை கோடி என்று சொல்லப்படுகிறது.

அதன்பின் அவர் நடித்த வெந்துதணிந்ததுகாடு படத்துக்கு சுமார் பத்துகோடி சம்பளம் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

அதற்கடுத்த படத்துக்கு முப்பது கோடிவரை சம்பளம் தர தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் முன் வந்தாராம்.

ஆனால், சிம்பு தரப்போ அடுத்த படத்துக்குச் சம்பளம் நாற்பது கோடி அதை யார் தருகிறார்களோ அவர்களுக்கே தேதிகள் என்று உறுதியாக இருந்தாராம்.

இந்நிலையில்தான் ராஜ்கமல் நிறுவனம் அவரை அணுகி அவர் கேட்ட சம்பளம் தருவதாக ஒப்புக்கொண்டதாம். அதன்பின் தேசிங்கு பெரியசாமி சொன்ன கதையின் பிரமாண்டம் அதற்கான பெரும்செலவுத் தொகை ஆகியன எல்லாம் இணைந்து இந்தப்படத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது என்கிறார்கள்.

இதனால் நினைத்ததைச் சாதித்தார் சிம்பு என்று அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Related Posts