சினிமா செய்திகள்

ஃபார்ஸி இணையத்தொடரில் விஜய்சேதுபதி தமிழ் பேசாசது ஏன்?

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கியுள்ள புதிய இந்தி இணையத்தொடர் ஃபார்ஸி. த்ரில்லர் வகையில் தயாராகியிருக்கும் இந்தத் தொடர் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது.

மேலும் இந்தத் தொடரில் கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான ‘ஃபார்ஸி’, பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

இத்தொடர் தமிழிலும் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. இதன் முன்னோட்டம் நேற்று வெளியானது.

அதன் இந்திப்பதிப்பில் விஜய்சேதுபதி கதாபாத்திரத்துக்கு அவரே இந்தியில் பேசியிருக்கிறார்.

அதேநேரம், அதன் தமிழ்ப்பதிப்பில் அவருடைய பாத்திரத்தில் அவர் குரல் இடம்பெறவில்லை.

இந்தியில் பேசிய அவர், தமிழில் ஏன் பேசவில்லை? என்று விசாரித்தால்,

தமிழிலும் நீங்கள் பேசவேண்டும் என்று படக்குழுவினர் சொன்னபோது, நான் இந்தியில் நடிக்க மட்டுமே ஒப்புக்கொண்டேன். அதனால் இந்தியில் மட்டும்தான் பேசுவேன், தமிழில் பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

பொதுவாக ஒரு மொழியில் எடுக்கப்படும் படைப்பு இன்னொரு மொழியிலும் வெளியிடும்போது அதற்குத் தனியாகச் சம்பளம் தருவார்கள்.

இந்தத் தொடரைப் பொறுத்தவரை இந்தியைவிட தமிழில் புகழ்பெற்றவர் விஜய்சேதுபதி. அவர் நடித்த தொடரை தமிழில் வெளியிடும்போது அதற்குத் தனியாகச் சம்பளம் கொடுப்பதுதான் முறை.

அப்படிக் கொடுக்காமல் படக்குழு ஏமாற்றியிருக்கும். அதனால் அவர் தமிழில் பேசியிருக்கமாட்டார் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

இந்தத் தொடரில் நடித்திருக்கும் ஷாகித்கபூருக்கு தமிழில் குரல் கொடுத்திருப்பவர் நடிகர் ஜீவா. இந்திநடிகர் அமோல்பலேகருக்குக் குரல் கொடுத்திருப்பவர் நடிக் நாசர்.

விஜய்சேதுபதிக்காகத் தமிழ்பேசியிருப்பவர் ஒரு பலகுரல் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts