எமிஜாக்சன் திடீர் விவாகரத்து – சிக்கலில் அருண்விஜய் படம்
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘அச்சம் என்பது இல்லையே’.இப்படத்தில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப்படத்தை ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் கதை முழுக்க முழுக்க இலண்டனில் நடப்பதுபோல் எழுதப்பட்டிருக்கிறதாம். அதனாலே நாயகியாக எமிஜாக்சனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பும் இலண்டனிலேயே தொடங்கியது.
அடுத்து, சென்னையிலேயே இலண்டன் போல் அரங்கம் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டனர். இதற்காக பெரியளவில் சென்னை பெரம்பூர் பின்னிமில்லில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாம்.
ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கவில்லை.
அதற்குக் காரணம் படத்தின் நாயகி எமிஜாக்சன்தான் என்கிறார்கள்.
என்னவாம்?
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த மதராசபட்டணம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். இவர் இலண்டனைச் சேர்ந்தவர்.
அவர்,விக்ரமுடன் தாண்டவம்,ஷங்கர் இயக்கிய ஐ,தனுஷ் நடித்த தங்க மகன்,உதயநிதியின் கெத்து,விஜய்யுடன் தெறி,ரஜினியுடன் 2.ஓ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் தவிர இந்தி, தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
எமிஜாக்சனுக்கும் பிரான்சைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பெனாய்ட்டோவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்குக் குழந்தையும் பிறந்தது.
இப்போது அவர்கள் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துவரை சென்றுவிட்டதாம்.
அதனால், அச்சம் என்பது இல்லையே படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்ட நாட்களில் எமிஜாக்சன் விவாகரத்துக்காக இலண்டன் நீதிமன்றத்தில் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவர் படப்பிடிப்பை இரத்து செய்துவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.
அவர் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தவியலாது என்பதால் இங்கே படப்பிடிப்பு நடத்தாமல் முடங்கியிருக்கிறதாம் அச்சம் என்பது இல்லையே படக்குழு.
இப்போது கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு விடுமுறைக்காலம் என்பதால் எமி ஜாக்சன் வருவது சனவரி மாதத்தில்தான் இருக்கும் என்கிறார்கள்.
அதுவரை அச்சம் என்பது இல்லையே படக்குழு காத்திருக்கவேண்டியதுதான் என்கிறார்கள்.
சோதனை மேல் சோதனை.











