என் முகத்திலேயே விழிக்கக்கூடாது எனச் சீறிய ரஜினி – காரணம் என்ன?
ரஜினிகாந்த் இப்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதற்கடுத்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால்சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றிற்கிடையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அந்தப்படத்தை சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபிச்சக்ரவர்த்தி இயக்கப்போவதாகவும் சொல்லப்பட்டது.
அதற்காக அவருக்கு தனியாக அலுவலகம் போட்டுக் கொடுத்து வேலைகள் தொடங்கினார்களாம்.
இப்போது அந்தப்படம் இல்லை என்று சொல்கிறார்கள்.
என்ன நடந்தது?
அப்படத்துக்காக சிபிச்சக்ரவர்த்தி சொன்ன மையக்கதை பிடித்துப்போய்த்தான் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த்.
அதன்பின், அலாவுதீன் பட இயக்குநர் ரவிசக்ரவர்த்தி, கண்ணன் உள்ளிட்ட மூத்தோருடன் இணைந்து திரைக்கதை உருவாக்கி ரஜினியிடம் சொல்லியிருக்கிறார் சிபிச்சக்ரவர்த்தி.
அந்தத்திரைக்கதை ரஜினிகாந்த்துக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி சிபிச்சக்ரவர்த்தி நடந்துகொண்ட முறை அவரை மிகவும் கோபப்படுத்திவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இதனால், லைகா நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த்,அவர் இயக்கத்தில் படம் நடிக்க முடியாது, இனிமேல் அவர் என் முகத்திலேயே விழிக்கக்கூடாது, உங்களுக்கு வேண்டுமானால் அவரை வைத்து படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மிகக் கடுமையாகச் சொல்லிவிட்டாராம்.
அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனத்துக்கு இன்னொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் சிபிச்சக்ரவர்த்தி. அது என்னவென்றால், ரஜினிகாந்த் நிராகரித்தது அறியாமல், படத்துக்கான செலவுத்தொகை குறித்த உத்தேசக்கணக்கை லைகா நிறுவனத்திடம் கொடுத்தாராம் சிபிச்சக்ரவர்த்தி.
அதில், இயக்குநர் சம்பளம் என்கிற இடத்தில் 12 கோடி என்று குறிப்பிட்டிருந்ததாம். அதுதான் லைகாவுக்குக் கிடைத்த இன்னொரு அதிர்ச்சி.
அந்நிறுவனம், இப்படத்துக்காக சிபிச்சக்ரவர்த்திக்கு சுமார் ஆறு கோடி சம்பளம் என்று சொல்லியிருந்ததாம். இவரோ அதை இரட்டிப்பாக்கிக் கேட்டிருக்கிறார்.
ஒரு பக்கம் ரஜினிகாந்த் இவரை நிராகரித்துவிட்டார். இன்னொரு பக்கம் இவர் சம்பளம் இரட்டிப்பாகக் கேட்கிறார். இவற்றால் இந்தப்படமே வேண்டாம் என்கிற முடிவுக்கு லைகா நிறுவனம் வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.











