விட்னஸ் – திரைப்பட விமர்சனம்
நாம் அன்றாடம் தெருக்கூட்டும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம் குப்பை அள்ளும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம், நாம் பார்க்காத அல்லது பார்க்க விரும்பாத அவர்கள் வாழ்நிலையைப் பார்த்து அதை நமக்கும் காட்டி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் தீபக்.
படித்துப் பட்டதாரியாகி வேலைக்குச் சென்று குடும்ப வறுமையைப் போக்கி அம்மாவை ஓய்வாக வைத்திருக்க விரும்பும் இளைஞன் திடீரென மரித்துப்போகிறான்.அவனுடைய மரணத்துக்குக் காரணம் அதிகாரவர்க்கம் மற்றும் மேட்டுக்குடிகள்.
மகனின் மரணத்தைச் செரிக்கவியலாத தாய், தன் சக்திக்கும் மீறி அதற்கான நியாயம் கேட்டும் இனி இதுபோன்றதொரு நிகழ்வு நடக்கக்கூடாது என்பதற்காகவும் போராடுகிறார். இறுதியில் என்னவாகிறது? என்பதைச் சொல்வதே விட்னஸ் படம்.
குப்பை கூட்டும் தொழிலாளியாக இயல்பாக நடித்திருக்கிறார் ரோகிணி. படம் நெடுக அவர் தவிக்கும் தவிப்பு நம்மையும் பற்றிப் பதற வைக்கிறது.
உயர்நடுத்தட்டு வகுப்பைச் சேர்ந்த நியாயமான சிந்தனைகள் கொண்டவராக வரும் ஷ்ரத்தாசிஸ்ரீநாத், படம் இயல்பாக நகர உதவுகிறார். அவருக்கும் அவர் குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளுக்குமான சண்டைகள் சமுதாயத்தின் பிரதிபலிப்பு.
பெத்துராஜ் தோழராக வரும் செல்வா, பரிசல்செந்தில்நாதன் உள்ளிட்ட நிஜ களப்போராளிகளைப் பயன்படுத்தி படத்தின் உண்மைத்தன்மையை உயர்த்தியிருக்கிறார்கள்.
வழக்ககுரைஞராக வரும் சண்முகராஜன் வேடமும் நடிப்பும் சிறப்பு. அடித்தட்டு மக்களுக்கான ஆறுதல்.
அழகம்பெருமாள்,ஸ்ரீநாத் உள்ளிட்டோர் தங்கள் நல்ல நடிப்பின் மூலம் உள்ளதை உள்ளபடி உரைத்திருக்கிறார்கள்.
போராடும் தோழர்களைத் தெரியும் அவர்களுக்கு உரமாகக் கண்ணுக்குத் தெரியாத போராளிகளாக இருக்கும் அவர்களுடைய மனைவியரின் பிரதிநிதியாக இந்தப்படத்தில் வரும் சுபத்ரா ராபர்ட், தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திக் கலங்க வைக்கிறார்.
ரமேஷ்தமிழ்மணியின் இசையில் கபிலனின் பாடல் வரிகள் திரைக்கதைக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
ஜே.பி.சாணக்யா மற்றும் முத்துவேல் ஆகியோர் தெளிந்த நீரோடைபோல் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் தீபக், அடித்தட்டு மக்களை அவர்களுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து படம் பிடித்தது போல் படமாக்கியிருக்கிறார். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் நுட்பமாகப் பகிரப்பட்டிருக்கின்றன.
தீர்ப்பு சொல்லும் இறுதிக்காட்சி அபாரம்.
சோனி லைவ் இணையத்தில் இப்படம் பார்க்கலாம்.











