பாலா சூர்யா பிரிவு – காரணம் என்ன?
பாலா இயக்கும் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகினார் என்பதோடு அப்படத்தைத் தயாரிக்கும் பொறுப்பிலிருந்தும் சூர்யா விலகிக் கொண்டார் என்பதுதான் இப்போதைய பரபரப்பான செய்தி.
என்ன நடந்தது?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பது எனும் பேச்சு தொடங்கியபோது, இப்படத்தில் உனக்கு மீனவர் கதாபாத்திரம் என்பதோடு காது கேட்காத வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி என்று பாலா சொன்னதும் சூர்யாவுக்கு உடனே பிடித்திருக்கிறது.
அதனால் அந்தப்படத்தைத் தாமே தயாரிப்பது என முடிவு செய்து படத்தயாரிப்பில் இறங்கிவிட்டார் சூர்யா.
அதன்பின், முழுநீளத் திரைக்கதையாக எழுதுகிற நேரத்தில் தான் பல சிக்கல்கள் வந்திருக்கின்றன.
தொடக்கத்தில் கலகலப்பாக நகரும் படம் கடைசியில் கடுமையான பழிவாங்கலில் முடிவடைகிற மாதிரியான திரைக்கதையில் தொடக்கம் சரியாக அமைந்ததும் படப்பிடிப்பு தொடங்கியது.
அதன்பின் முழுமையான திரைக்கதையை உருவாக்கினார்களாம். அதில் பல விசயங்கள், குறிப்பாக க்ளைமாக்ஸ் எனும் இறுதிக்காட்சி சூர்யாவுக்குப் பிடிக்கவில்லையாம்.
அதைப் பல மாதிரி மாற்றி மாற்றிச் சொன்னபோதும் சூர்யாவுக்குத் திருப்தியாக இல்லை.
தொடக்கத்தில் சூர்யாவைத் திருப்திப்படுத்திவிட நினைத்த பாலாவுக்கு போகப்போக எரிச்சல் வந்துவிட்டதாம்.
அதனால், இதற்குமேலும் இதை இழுத்துக் கொண்டே இருந்தால் சரியாக இருக்காது என நினைத்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் சூர்யா தரப்பில், இந்தப்படத்துக்கு இதுவரை சுமார் பத்துகோடி வரை செலவாகிவிட்டது.இருந்தாலும் திரைக்கதையில் திருப்தி இல்லாமல் படத்தைத் தொடர்வதில் பலனில்லை என்று முடிவு செய்ததால் இருவரும் சுமுகமாகப் பேசி விலகிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
பாலா என்கிற படைப்பாளியின் சிந்தனை மூலம் முழுமையான நாயகன் ஆனார் சூர்யா. ஆனால் இப்போது காலமாற்றம் காரணமாக பாலாவின் சிந்தனை சூர்யாவுக்குப் பழசாகத் தெரிகிறது.இதுதான் பிரிவுக்குக் காரணம் என்கிறார்கள்.










