ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் – லத்தி பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் லத்தி.இது விஷாலின் 32 ஆவது படம். இதை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தை வினோத்குமார் எனும் புதியவர் இயக்குகிறார்.சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா.
இப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், பட வேலைகள் முழுமையாக முடிவடையாததால் பட வெளியீடு தள்ளிப்போனது.
இப்போது டிசம்பர் 22 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தைத் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவேண்டும் எனக்கேட்டு உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனத்தை அணுகியிருக்கிறார்கள்.
முதலில் தயங்கிய அவர்கள் இப்போது அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டனராம்.
திருச்சி, திருநெல்வேலி ஆகிய இரண்டு விநியோகப் பகுதிகள் தவிர தமிழகமெங்கும் லத்தி படத்தை வெளியிடவிருக்கிறது ரெட்ஜெயண்ட் நிறுவனம்.விஷாலின் பழைய சிக்கல்களுக்காக அவ்விரண்டு பகுதிகளும் வேறு விநியோகஸ்தர்களுக்குக் கொடுக்கப்படவிருக்கிறது என்கிறார்கள்.
அவ்விரண்டு பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளில், வெளிப்படையாக ரெட்ஜெயண்ட் பெயர் போட்டு வெளியிடுவார்களா? அல்லது பெயர் போடாமல் வெளியிடவிருக்கிறார்களா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
ரெட்ஜெயண்ட் நிறுவனம் படத்தை வெளியிட ஒப்புக்கொண்ட காரணத்தால் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
இதனால், ஒரேகல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்த மகிழ்வில் இருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் நந்தாவும் நடிகர் ரமணாவும்.











