சினிமா செய்திகள்

திருச்சி திருநெல்வேலி வெற்றி மதுரை சேலம் இழுபறி – வாரிசு வியாபார நிலை

விஜய்யின் வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமை லலித்குமாரின் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ பெற்றுள்ளது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

தமிழ்நாடு உரிமை அவர் வாங்கினாலும், சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் கோவை ஆகிய ஐந்து விநியோகப் பகுதிகளில் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது என்கிறார்கள்.

மீதமுள்ள திருச்சி,சேலம், மதுரை, திருநெல்வேலி ஆகிய விநியோகப் பகுதிகளில் நல்லவிலைக்குப் படத்தை வியாபாரம் செய்வது விலை சரியாக அமையவில்லையெனில் தானே வெளியிடுவது என்று முடிவெடுத்திருக்கிறார் லலித்குமார்.

அதன்படி திருச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகள் வியாபாரம் முடிவடைந்துவிட்டதாம். திருச்சியில் மினிமம் கியாரண்டி அடிப்படையில் சுமார் ஏழு கோடியே எழுபது இலட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல் திருநெல்வேலியிலும் நான்கரை கோடிக்கு மினிமம் கியாரண்டி அடிப்படையில் கொடுக்கப்பட்டுவிட்டதாம்.

அதேசமயம், மதுரை,சேலம் ஆகிய இரு பகுதிகளில் படத்தை வாங்கத் தயங்குகிறார்களாம். மதுரைக்கு விலை எட்டுகோடியே ஐம்பது இலட்சம் என்றும் சேலம் விலை ஆறுகோடி என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

இவ்வளவு விலை கொடுத்து வாங்க இதுவரை யாரும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் இவ்விரண்டு பகுதிகளிலும் தாமே நேரடியாக வெளியிடுவது அல்லது விநியோக முறையில் வியாபாரம் செய்வது என்கிற முடிவில் லலித்குமார் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts