பனாரஸ் – திரைப்பட விமர்சனம்
ஓர் அழகான காதல்கதையில் கொஞ்சம் சிம்புவின் மாநாடு படம் போல் டைம்லூப் வகை திரைக்கதையையும் கலந்து வெளிவந்திருக்கும் படம் பனாரஸ்.
நாயகன் ஜையீத்கான், புதுநடிகர் போல் இல்லாமல் எல்லாக் காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. காலமாற்றம் காரணமாகக் குழம்பி நிற்கும் நேரங்களிலும் தேர்ச்சி பெறுகிறார்.
நாயகி சோனல் மாண்ட்ரியோ அழகும் இளமையும் துள்ளத் துள்ள இருக்கிறார். கங்கை நதியில் படகில் அவர் பாடிக்கொண்டே வரும் காட்சி நன்று.
டெத் போட்டோகிராபர், ஆட்டோ ஓட்டுநர், நாயகனின் நண்பர் எனப்பலமுகம் காட்டியிருக்கும் சுஜய்சாஸ்த்ரி கவனம் ஈர்க்கிறார். அவருக்குள் இருக்கும் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சியிலும் கவர்கிறார்.
அச்யுத்குமார், சப்னாராஜ்,தேவராஜ் உள்ளிட்ட நடிகர்களும் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கின்றனர்.
அத்வைத குருமூர்த்தியின் ஒளிப்பதிவில் காசி நகரின் சந்துபொந்துகளெல்லாம் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. கங்கை மற்றும் கங்கைக்கரைக் காட்சிகள் சிறப்பு.
அஜனீஷ்லோக்நாத் இசையில் பழனிபாரதியின் வரிகளில் பாடல்கள் கேட்கக் கேட்க இதமாக இருக்கின்றன.
இயக்குநர் ஜெயதீர்த்தாவுக்குக் காதல் கதையும் காட்சிகளும் நன்றாக வருகின்றன. அதற்கும் டைம் டிராவல் டைம் லூப் போன்ற விசயங்களைக் கலந்து சொதப்பியிருக்கிறார்.
காசி நகரையும் கங்கை அழகையும் கண்டுகளிக்க வைக்கும் காட்சிகளுக்காகவே பார்க்கலாம்.











