பொன்னியின்செல்வன் சர்ச்சை – வெற்றிமாறனுக்கு சீமான் ஆதரவு
அண்மையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,
அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன். இதுபோன்ற பிர்ச்சினைகளை கையாளும்போது எதனை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தேன்.
அதற்கு அவர், “தனிமனிதனால் சமூகத்திற்குத் தீர்வு கிடைக்கும் என சினிமாவில் சொல்லாதீர்கள். அதே தவறு தான் நிகழ்கிறது. அமைப்பாய்த் திரள வழிசெய்யுங்கள்” என்றார்.
மேலும், “கலை என்பது ஓர் அரசியல். நாம் தெரிந்தோ, தெரியாமலோ அரசியலுக்குள் தான் இருக்கிறோம்” என திருமாவளவன் சொல்லியிருந்தார்.
இலக்கியம், சினிமா எப்படி அவர்கள் கையில் இருந்தது. அந்த தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது. அதனால்தான் வெளிப்புற ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவத்தையும் சினிமா பெற்றுள்ளது என நினைக்கிறேன். சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம்.
சினிமாவை அரசியல்மயப்படுத்த வேண்டியது முக்கியம். சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களைப் பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்தக் கலையை நாம் சரியாகக் கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பதாகட்டும், இராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது.
சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன் என்றார்.
இந்தப் பேச்சுக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனின் கருத்து குறித்து சீமான் கூறியதாவது,
தம்பி வெற்றிமாறன் கூறியது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்திடமிருந்த திரைக்கலையைப் பொதுமைப்படுத்தியது அன்றிருந்த திராவிட இயக்கங்கள் தான்.
அன்றைய திராவிடத் தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஐயா எம்.ஜி.ஆர் போன்றவர்கள் திரைப்படத் துறையில் தான் பணியாற்றினார்கள். அதனால், தம்பி அவ்வாறு குறிப்பிடுகிறார்.
எங்களுடைய பெரும்பாட்டன் அருண்மொழிச்சோழனை இந்து மன்னன் என்று பேசுவதெல்லாம் ஒரு வகையான வேடிக்கை தான்.
வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி, அவரை ஆரியம் தன்வயப்படுத்திக் கொள்ள நினைப்பதைப் போல, இராஜராஜ சோழனையும் தன்வயப்படுத்தும் முயற்சி தான் அது. அந்தக் காலத்தில் இந்திய நாடும் இல்லை, இந்து மதமும் இல்லை என்பது உலகத்திற்கே தெரியும், இராஜராஜ சோழன் என்ற மன்னன் சிவனை வழிபட்ட சைவ மரபினன் என்பது. பன்னிரு திருமறைகளைக் கறையான் அரிக்காமல் காப்பாற்றிக் கொடுத்தவர், அவர் தான். ‘ஏடு தந்தானடி தில்லையிலே’ என்ற பாடலெல்லாம் அதனால் தான் பாடப்பட்டது.
தமிழர் அடையாளங்களில் புகழ் பெற்ற எல்லாவற்றையும் ஆரியம் தனதாக்கிக்கொள்ள முனையும். அப்படித்தான் எங்கள் சிவனை, முருகனை தனதாக்கிக்கொண்டது. அந்த அடிப்படையில் இராஜராஜ சோழனையும் இந்து என்று தன்வயப்படுத்திக்கொள்ள ஆரியம் முயல்வதை அனுமதிக்கக் கூடாது என்று தான் தம்பி வெற்றிமாறன் சொல்கிறார். அதை நான் ஏற்கிறேன்.
ஒரு பெரிய புரட்சியைப் ‘பராசக்தி’ என்கிற படம் செய்தது. அதற்குக் காரணம் ஐயா கலைஞர் எழுதிய வசனம் தான். அப்படிபட்ட எதார்த்த உரையாடல்களைக் கொண்டு திரையில் மாறுதல்களைச் செய்து காட்டியது திராவிடத் தலைவர்கள் தான் என்பதனால் இந்த இடத்தில் தம்பி வெற்றிமாறன் கூறிய கருத்தை ஏற்கிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.










