விக்ரமுடன் இணைகிறார் துருவ் – கார்த்திக்சுப்புராஜ் பட ஆச்சரியம்
நடிகர் விக்ரம் இப்போது,கோப்ரா மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இவற்றில், ‘பொன்னியின் செல்வன்’ பெரிய பட்ஜெட், நிறைய நடிகர்கள் உள்ள படம் என்பதால் எப்போது படப்பிடிப்பு முடியும் என்பதே தெரியாது. ‘கோப்ரா’ படத்துக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது.
இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை விக்ரமுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம்.
‘கோப்ரா’ படத்தைத் தயாரித்து வரும் லலித் குமார், கார்த்திக் சுப்புராஜ் – விக்ரம் படத்தையும் தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
மேலும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துக்கொண்டே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க விக்ரம் முடிவு செய்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். ஆகையால், விக்ரம் படத்தின் முதற்கட்டப் பணிகளை கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் கார்த்திக் சுப்புராஜ் தொடங்குவார் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்னொரு ஆச்சரியமாக இந்தப்படத்தில் விக்ரமுடன் அவர் மகன் துருவ்வும் நடிக்கவிருக்கிறாராம்.
ஆதித்யவர்மா படத்துக்குப் பிறகு இரண்டாவதாக இந்தப்படத்தில் நடிக்கவிருக்கிறார் துருவ்.
கதை மிகவும் சிறப்பாக இருப்பதால் இணைந்து நடிக்கவேண்டாம் என்கிற முடிவை மாற்றிக்கொண்டு விக்ரமும் துருவ்வும் இணைந்து நடிக்கிறார்களாம்.











