ஆர்.ஜே.பாலாஜிக்குப் புகழாரங்கள் – வீட்லவிசேசம் பட பாடல் விழாத் தொகுப்பு
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் இசை வெளியீடு ஜூன் 10, 2022 அன்று நடைபெற்றது.
ஆர்.ஜே..பாலாஜி-என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ பிராஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
மாபெரும் வெற்றிபெற்ற இந்தித் திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ மொழிமாற்றான இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, கேபிஏசி.லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தப்படத்துக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஜயகுமார் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.அக்சத் கில்டியல்-சாந்தனு ஸ்ரீவஸ்தவ் ஆகியோர் படத்தின் கதையை எழுத
ஆர்.ஜே.பாலாஜி வசனங்களை எழுதியுள்ளார். பா.விஜய் பாடல் வரிகள் கொடுத்துள்ளார்.
செல்வா ஆர்.கே. படத்தொகுப்பை மேற்கொள்ள, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.தினேஷ் நடன அமைப்புகளைச் செய்துள்ளார்.
இத்திரைப்படம் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆடியோ விஷேசம் என்ற பெயரில் ஜூன் 10, 2022) அன்று நடைபெற்றது.
கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி, பி வாசு போன்ற இயக்குநர்களை படக்குழு இவ்விழாவில் கௌரவித்தனர். மூவருக்கும் ‘ மக்கள் இயக்குநர் ‘ என்ற பட்டம் கொடுத்து படக்குழு கௌரவித்தனர்.
இவ்விழாவினில் இயக்குநர் பி வாசு கூறியதாவது..,
குடும்பங்களைச் சென்றடையும் படங்களை அதன் பாணியில் புரோமோஷன் செய்கிறார் பாலாஜி. இது போன்ற படத்திற்குத் தயாரிப்பாளரும், அதற்கு உயிர்கொடுக்கும் நடிகர்களும் கிடைத்துவிட்டால் படம் உயிர்பெற்றுவிடும். படத்திற்கு பிளான் என்பது முக்கியமான விசயம். படத்தின் அனைத்துக் கூறுகளையும் மனதில் வைத்துப் படத்தை திட்டமிட்டு எடுக்க வேண்டும். இந்தப் படத்தில் எனக்குப் பிடித்தமான சத்யராஜ் நடித்துள்ளார். அதுபோக நடிப்பு ராட்சசி நடிகை ஊர்வசி நடித்துள்ளார். ஊர்வசி தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களின் வசனங்களையும் மனதில் வைத்து அதற்கேற்றாற் போல், மற்றவர்க்கு உதவுவார், அத்தோடு சரியாக ரியாக்ட்டும் செய்வார். சத்யராஜ் நடிப்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து, பெரிய அர்ப்பணிப்புடன் வேலை செய்வார். அதனால் தான் அவருடைய பல கதாபாத்திரங்கள் இப்போதும் நின்று பேசுகின்றன. தமிழகத்திற்கு வந்து இது போன்ற படங்களைத் தயாரிக்கும் போனி கபூருக்கு நன்றி. இந்தப் படத்தின் வெற்றி எங்கள் படத்தை விட மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துக்கிறேன் என்றார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியதாவது….
நாங்கள் எடுத்த பழைய படங்களை நியாபகம் வைத்து எங்களை அழைத்தது படக்குழுவின் பெருந்தன்மை. பாலாஜியின் உழைப்பு மிகப்பெரியது, பல படங்களில் காமெடியாக நடித்து, பின்னர் ஹீரோவாகி, இயக்குநராகவும் மாறியுள்ளார். ஒரு கதையை பார்வையாளர்களுக்கு எப்படிச் சொன்னால் பிடிக்கும் என்பதைத் தெரிந்து செய்பவர் பாலாஜி. இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பல நாள் முன்னாடி நான் கேட்டிருந்தேன், ஆனால் அது நடக்கவில்லை. இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன். படத்தின் பாடல் மற்றும் டிரைலர் நன்றாக இருக்கிறது. படம் பெரிய வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் சுந்தர் சி கூறியதாவது….
நான் அறிமுகப்படுத்திய பாலாஜி நடிகராகி இப்போது இயக்குநராக மாறி இருப்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. பாலாஜியிடம் நல்ல கிரியேட்டிவ் திறமை இருக்கிறது. நான் அவர் திறமையைத்தான் பயன்படுத்தினேன். அவர் இப்போது அவரது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இந்தியை விடப் பல திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் உள்ளனர். அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும். படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சிறப்பாக உள்ளது. இந்தப் படத்திற்கு என் வாழ்த்துகள் என்றார்.
இசையமைப்பாளர் கிரிஷ்கோபாலகிருஷ்ணன் கூறியதாவது…..
ஹாரர், திரில்லர் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த என்னை கமர்சியல் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் படி மாற்றிய பாலாஜிக்கு நன்றி. எங்களுக்குள் சரியான கனெக்ட் இருந்தது. இந்தத் தலைமுறை இரசிக்கும்படியான குரல்களைக் கொண்ட பாடகர்களை இந்தப் படத்தில் பாட வைக்க முடிவுசெய்தோம். அதன்படியே உருவாக்கினோம். பாலாஜி இந்தப் படத்தில் பாடியுள்ள பாடல் சிறப்பாக வந்துள்ளது. விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் போன்ற ஒரு பாடலை சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் பார்த்து இரசிக்கும்படியான படமாக இது இருக்கும் என்றார்.
பாடலாசிரியர் பா.விஜய் கூறியதாவது……
எனக்கு தமிழ் சினிமாவில் இரண்டாவது சுற்றை ஆரம்பித்தது பாலாஜி தான். பாலாஜி பல திறமைகள் கொண்டவர். அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிகளைக் கொடுத்துவருகிறார்.எனக்கு எல்லாப் படத்திலும் வாய்ப்பு கொடுக்கும் பாலாஜிக்கு நன்றி. இசையமைப்பாளர் கிரிஷ் உடைய பாடல்களை வித்யாசாகர் உடைய நவீன வடிவமாக நான் பார்க்கிறேன். இந்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்கிறேன் என்றார்.
படத்தொகுப்பாளர் செல்வா கூறியதாவது…..
பாலாஜி நேரத்தை எப்பொழுதும் வீணாக்க மாட்டார். அவர் எனக்கு நிறைய விசயங்களைக் கற்றுக்கொடுத்துள்ளார். இந்தப் படக்குழுவுடன் பயணித்தது மகிழ்ச்சி. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனக்கு நிறைய ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்றார்.
கலை இயக்குநர் செல்வா கூறியதாவது…..
பதாய் ஹோ திரைப்படத்தை நம்மூர் ஸ்டைலில், பாலாஜி மற்றும் சரவணன் உருவாக்கியுள்ளனர். இந்தப்படம் எல்லோரும் பிடிக்கும்படியான படமாக உருவாகியுள்ளது என்றார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியதாவது……
பாலாஜி இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவருடைய வெற்றி எனக்கு சந்தோசம் கொடுக்கிறது. இந்தப் படம் இந்தியை விடப் பெரிய வெற்றி பெரும். படத்தின் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களை நடிக்க வைப்பதில் உறுதியாக இருப்பார் பாலாஜி. அதனால் இந்தப் படம் இந்தியை விடச் சிறப்பான வெற்றியை அடையும் படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.
நடிகை அபர்ணா பாலமுரளி கூறியதாவது…….
இது தான் எனது முதல் ஆடியோ லான்ச், நான் நடித்த முந்தைய படங்களின் வெற்றியைக் கொண்டாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப்படத்தில் எனக்கு இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு பாலாஜிக்கு நன்றி. சத்யராஜ் மற்றும் ஊர்வசி போன்ற பெரிய நடிகர்களுக்கு மத்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. படத்தின் பெரிய பலமே ஆர் ஜே பாலாஜி, சரவணன் ஆகிய இருவரும் தான். படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள். நன்றி என்றார்.
நடிகை ஊர்வசி கூறியதாவது…..
என்னுடைய மதிப்பை எனக்கு அதிகமாக ஞாபகப்படுத்தும் நபர் பாலாஜி. நான் பொதுவாக பல நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை. பாலாஜி இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இந்தப் படம் பல நாட்களாக தமிழ் சினிமாவில் வராமல் இருந்த குடும்பங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு நடிகரைப் புரிந்துகொண்டு, அவர்கள் மேல் முழு நம்பிக்கையையும் வைப்பவர் ஆர் ஜே பாலாஜி. பழைய சத்யராஜ்யை ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தில் கொண்டுவந்துள்ளார். இந்தப் படத்தில் பழைய நடிகர்கள் பலரை நடிக்கவைத்துள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு ரஜினி சாரை இயக்கும் அளவிற்கு திறமை உள்ளவர் ஆர் ஜே பாலாஜி. அபர்ணா பாலமுரளி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை நன்றாக நடித்துள்ளார். பட்ஜெட்டையும், வசூலையும் மனதில் வைத்து படத்தை இந்த இயக்குநர்கள் உருவாக்குகிறார்கள். படத்திற்கு என் வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாவது…..
நான் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ஒரு ரீமேக்காக உருவானது தான். நான் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுடன் படம் எடுக்க நினைத்தேன். தமிழ்க் கலைஞர்களுடைய ஒழுக்கங்களை நான் கேட்டு வியந்திருக்கிறேன். நான் தமிழில் வெற்றியடைந்த பல திரைப்படங்களை இந்தியில் ரீமேக் செய்துள்ளேன். என் குடும்ப வாழ்கையும், தொழிலும் எப்போதும் தென்னிந்தியாவுடன் தொடர்பில் இருக்கும். தென்னிந்தியா என் வாழ்வில் எப்போதும் தொடர்பில் இருக்கும். ஶ்ரீதேவி, ஊர்வசி பற்றி எப்போதும் கூறுவார். அவர் சிறந்த நடிகை என்று ஶ்ரீதேவி கூறுவார், நானும் அதை ஒத்துக்கொள்வேன். அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தான் இந்தப்படத்தின் முதுகெலும்பு. நான் தமிழ்ப்படங்களைத் தயாரிப்பதில் மகிழ்ச்சி. நான் நிறைய தமிழ்ப்படங்களைத் தயாரிக்க ஆர்வமாய் உள்ளேன். பாலாஜி சிறந்த படமாக வீட்ல விஷேசம் படத்தை உருவாக்கியுள்ளார். அவர் சிறந்த நடிகர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்தப் படம் பெரிய பிளாக்பஸ்டராக மாறும் என்றார்.
இயக்குநர் என்.ஜே.சரவணன் கூறியதாவது…..
எங்களுக்கு இந்தப் படத்தை இயக்க வாய்ப்பளித்த போனிகபூர், ராகுலுக்கு நன்றி. இந்திப் படத்தைப் பார்த்த பிறகு இதைத் தமிழில் எப்படி உருவாக்கப் போகிறோம் என்ற எண்ணத்தைப் போக்க எங்களுக்கு இருந்தவர் ஊர்வசி. நான் பார்த்து வியந்த சத்யராஜ் அவர்களை இயக்குவது எனக்கு மகிழ்ச்சி. எங்கள் படக்குழு எங்களுக்குப் பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளனர்.நாங்கள் பெருமைப்படும் ஒரு படத்தை உருவாக்கியுள்ளோம் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றார்.
நடிகர் சத்யராஜ் கூறியதாவது…..
நான் கட்டப்பா போன்ற சீரியஸ் படங்களாக நடித்துகொண்டிருந்த போது, என்னுடைய பழைய கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வர வாய்ப்பில்லாமல் இருந்தது. அதை எனக்கு மீட்டுக் கொண்டு வர வந்தவர் பாலாஜி. இந்தப் படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன என நான் கேட்ட போது, உங்களுடைய பாவமான நடிப்பு எனக்குத் தேவை என்று கூறினார். ஊர்வசி மேடம் இந்தியன் சினிமாவிற்கு கிடைத்த வரம். ஊர்வசியைத் தவிர இந்தக் கதாபாத்திரத்தை யாராலும் சிறப்பாகச் செய்துவிடமுடியாது. அவர்களுடைய நடிப்பு அபாரமானது. அபர்ணா பாலமுரளி உடைய நடிப்பு சூரரைப் போற்று படத்தில் போல் சிறப்பாக இருந்தது. லலிதா போன்ற திறமை மிகுந்த நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் நடிப்பது எனக்குச் சவாலாய் இருந்தது. ஆர் ஜே பாலாஜி, சரவணன் சிறந்த காம்போ, இருவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்தப் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். தயாரிப்பாளர் ராகுல், மேனேஜர் விக்கி ஆகியோர் இந்தப் படம் சிறப்பாக உருவாகக் காரணமாக இருந்தார்கள். நான் இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துகிறேன் என்றார்.
படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில்…….
நான் இரண்டு, மூன்று வருடங்களாகக் காத்திருந்த மேடை இது. ஊர்வசி மேடம் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தொழில்நுட்பம், எதிரில் நடிப்பவர்கள், கதை எல்லாவற்றையும் மனதில் வைத்து நடிப்பை வெளிப்படுத்துபவர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி.இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டுற்கு வந்த அனைவருக்கும் படக்குழு சார்பாக நன்றிகள். இந்தியில் பல வெற்றிகளைக் கொடுத்துவிட்டு, தமிழில் அஜித்குமார் போன்ற பெரிய நடிகர்களை வைத்துத் தயாரித்துவிட்டு, என்னை வைத்துப் படம் எடுப்பது மகிழ்ச்சி. அவருடன் தயாரிப்பாளர் ராகுல் உடைய உழைப்பு அளப்பறியது. இயக்குநர் சரவணன் தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு. எங்களுடைய புரிதல் தான் எங்களை இரண்டு படங்களை உருவாக்கவைத்தது. அவர் என்னைப் பல இடங்களில் தாங்கிப்பிடித்துள்ளார். நான் தூரத்தில் இருந்து பார்த்த இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் சத்யராஜ் சாரை இயக்கியது எனக்கு சந்தோசம். அவர் நாம் கேட்பதை அப்படியே கொடுப்பார். தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள அனைவரும் இந்தப் படத்தில் பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர். பா விஜய் சார் பாடலை ஒரே இரவில் எழுதிக் கொடுப்பவர். அவர் இப்போது வரை என் எல்லாப் படத்திலும் பாட்டு எழுதுகிறார். மக்கள் மனதில் அதிக நாள் நிற்க கூடிய பாடலை நாங்கள் உருவாக்க விரும்பினோம். கிரிஷ் அப்படிப்பட்ட பாடல்களை கொடுத்துள்ளார். சர்பட்டா, கர்ணன் போன்ற படங்களில் படதொகுப்பாளர் செல்வா, அவர் என் படத்தில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். இந்தப் படம் பலரின் முயற்சியில் உருவாகியுள்ளது. வீட்ல விசேஷம், குடும்பத்தோடு தியேட்டரில் பார்க்கும் படமாக இருக்கும்
இவ்வாறு அவர் பேசினார்.











