சினிமா செய்திகள்

படத்தொகுப்பாளர் ரூபன் இப்படிச் செய்யலாமா?

தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி படத்தொகுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ரூபன். பெரிய கதாநாயகர்கள் படங்கள் மற்றும் வசூல் ரீதியான வெற்றிப்படங்களில் பணிபுரிந்திருப்பதால் அவர் முன்னணி படத்தொகுப்பாளராக அறியப்படுகிறார்.

அதிக எண்ணிக்கையிலான படங்களுக்கு படத்தொகுப்பும் செய்துவருகிறார்.

இந்நிலையில், அவர் மீது குற்றச்சாட்டுகளும் நிறையவருகின்றன.

இவர் முன்னணி படத்தொகுப்பாளர் என்று பெயர் பெற்றிருப்பதால் இவர் அதிகாரப்பூர்வமாகப் பணியாற்றும் படங்களைத் தாண்டி அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் பல படங்களில் வேலை செய்கிறாராம். அதுதான் குற்றச்சாட்டு என்கிறார்கள்.

பொதுவாக ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது அதில் பணியாற்றுப்வர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்படுவது இயல்பு. அப்படி நடக்கும்போது சம்பந்தப்பட்ட நபரை முற்றிலும் நிராகரித்துவிட்டு இன்னொருவரை வைத்து வேலை செய்வது பணம்போட்டவர்களின் நோக்கமாக இருக்கும்.

ஆனால், பணியாற்றுபவர்களுக்கு ஒரு பொறுப்பும் நேர்மையும் இருக்கவேண்டும். அதாவது ஒருவரை மாற்றிவிட்டு நம்மைக் கூப்பிடுகிறார்கள் என்றால் யோசித்துத்தான் அந்த வேலையை ஒப்புக்கொள்ளவேண்டும். சம்பந்தப்பட்டவரைத் தொடர்புகொண்டு உண்மையை அறியவேண்டும் அல்லது அவருடைய முறையான விலகலுக்குப் பிறகுதான் நான் பணியாற்றுவேன் என்று சொல்லவேண்டும்.

இந்தப் பொறுப்பு ரூபனிடம் இல்லை என்பதுதான் குற்றச்சாட்டு.

அண்மையில் நேரடியாக இணையத்தில் வெளியான ஒரு படத்தின் படத்தொகுப்பாளர் செய்த வேலை தயாரிப்பு நிறுவனத்துக்குப் பிடிக்கவில்லையாம். உடனே, ரூபனை அழைத்துப் படத்தைத் தொகுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் அதை ஏற்றுக்கொண்டு அதைச் செய்திருக்கிறார். அதுமட்டுமல்ல, தயாரிப்பு நிறுவனத்தின் சொல்கேட்டு படத்தின் இயக்குநர் படத்தொகுப்பு மேசைக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டாராம்.

படத்தின் இயக்குநரையே வரக்கூடாது என்று சொல்லுமளவுக்கு வளர்ந்திருக்கும் ரூபனின் செயல் எல்லோரையும் முகம்சுளிக்க வைத்திருக்கிறது.

அதேபோல் தற்போதும் ஓரிரு படங்களில் இதே வேலையைச் செய்துவருகிறாராம். இதனால் சக படத்தொகுப்பாளர்கள் மற்றும் திரைத்துறையினர் பலர் அவர் மீது கோபமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Related Posts