சினிமா செய்திகள்

வரி செலுத்தாமல் வழக்கு தொடர்ந்த விஜய் தனுஷ் மற்றும் ஷங்கர் – ரசிகர்கள் விமர்சனம்

இயக்குநர் ஷங்கர், 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ என்ற மகிழுந்தை இறக்குமதி செய்தார். இந்த மகிழுந்துக்கு நுழைவு வரியாக சுமார் ரூ.44 லட்சம் செலுத்திவிட்டு, வணிக வரித்துறை முதன்மை ஆணையரிடம் தடையில்லாச் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே, பதிவு செய்ய முடியும் என்று கே.கே.நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறினார்.

இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷங்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 15 விழுக்காடு நுழைவு வரியைச் செலுத்தி,மகிழுந்தைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதன்படி அவரது மகிழுந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் வி.சண்முகசுந்தர், ‘வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த பலர், நுழைவு வரி செலுத்தாமல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நுழைவு வரியில் 12 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை செலுத்தி சொகுசு காரை பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

இதில் ஒரு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்’ என்று கூறி தீர்ப்பு நகலை தாக்கல் செய்தார்.

இயக்குநர் ஷங்கர் சார்பில் ஆஜரான சாய்குமரன், ‘இந்த டிவிசன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது’ என்றார்.

அதற்கு அரசு வழக்குரைஞர், ‘சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, நிலுவையில் உள்ள அந்த வழக்குகளை எல்லாம் செப்டம்பர் 16 (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இயக்குநர் ஷங்கரைப் போலவே, நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டும், நடிகர் தனுஷ் 2015 ஆம் ஆண்டும் சொகுசு கார்களை வாங்கி, அதற்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால உத்தரவுகளை பெற்றுள்ளனர்.

இவர்களது வழக்குகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் வழக்குகள் நாளை நீதிபதி டி.ராஜா முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

இச்செய்தி நாளேடுகளில் வெளியானதைத் தொடர்ந்து,

திரைப்படங்களில் மக்களுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்கும் விஜய் தனுஷ் இயக்குநர் ஷங்கர் போன்றோர் உரிய வரியைச் செலுத்தாமல் இப்படி வழக்கு தொடரலாமா? என்று பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

குடிமகன்களுக்குரிய அடிப்படை உரிமைகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு? என்றும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Related Posts