இரண்டகம் செய்யும் விஜய் அஜீத் – தொழிலாளர்கள் குமுறல்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் விஜய் அஜீத் ஆகியோர்.
விஜய் இப்போது 66 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத் 62 ஆவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய்யின் 66 ஆவது படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதற்கடுத்தகட்டப் படப்பிடிப்பு மே முதல்வாரத்தில் ஐதராபாத்தில் தொடங்கவிருக்கிறதாம். அங்கே ஒரு பெரிய அரங்கம் அமைத்து அதில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது என்கிறார்கள். அங்கேயே மொத்தப் படப்பிடிப்பையும் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதேபோல், அஜீத்தின் 63 ஆவது படத்தை இந்தித் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதே ஐதராபாத்தில்தான்.
ஐதராபாத் போய் சென்னை அண்ணாசாலை போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடக்கிறதெனச் சொல்கிறார்கள். அந்தப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் அங்கேயே நடக்கவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இப்படி தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இரண்டு நடிகர்களும் ஐதராபாத்தில் மொத்தப் படப்பிடிப்பையும் நடத்துவதால் பெரும்பாலான தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்.
ஏற்கெனவே, தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்தினால் இரசிகர்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று சொல்லி ரஜினிகாந்த் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடப்பதே இல்லை.
இப்போது அவருடைய வழியில் விஜய்யும் அஜீத்தும் நடந்து தமிழ்த் தொழிலாளர்களுக்கு இரண்டகம் செய்யலாமா? எனத் தொழிலாளர்கள் மத்தியில் குமுறல் கேட்கிறது.











