வலிமை – விமர்சனம்
சென்னையை உலுக்கும் போதைப்பொருள் வியாபாரத்தைக் கருவறுக்கத் துடிக்கும் அதிரடி காவல்துறை அதிகாரியை அவரது குடும்பத்தினரை வைத்து வில்லன் கூட்டம் மிரட்ட அதை எப்படி எதிர்கொண்டு வெற்றியடைகிறார் என்கிற பழைய ஒரு வரிக்கதைதான் வலிமை என்கிற மூன்று மணி நேரப் படம்.
அஜீத் அழகாக இருக்கிறார், ஒயிலாக நடக்கிறார், உடல் வளையாமல் நடனமாடுகிறார், துள்ளுந்தில் துரத்துகிறார், அம்மாவிடம் அன்புகாட்டுகிறார், குடிகார அண்ணனை அரவணைக்கிறார், பாசக்கார தம்பியைப் பாதுகாக்கிறார் என படம் முழுக்க அவரது ஆதிக்கம்தான்.
நாயகி அந்தஸ்தில் ஹீமாகுரோஷி. ஜோடிப்பொருத்தமும் வேலைப் பொருத்தமும் சரியாக இருக்கிறது. காதல் காட்சிகளும் பாடல்களும் இல்லை.
வில்லனாக கார்த்திகேயா. வலிமையுள்ள உடலுக்குச் சொந்தக்காரர். நல்ல வரவு.
அம்மா சுமித்ரா, அண்ணன் அச்யுத்குமார், தம்பி ராஜ் அய்யப்பா ஆகியோர் கொடுத்த வேலைகளைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
நீரவ்ஷா ஒளிப்பதிவில் படத்தைக் கவனிக்க வைக்கிறார். நம்பமுடியாத காட்சிகளையும் இரசிக்க வைத்திருக்கிறார்.
யுவனின் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். ஜிப்ரானின் பின்னணி இசை அளவுக்கதிகம்.
சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயனுக்கு வேலை அதிகம்.நன்றாகச் செய்திருக்கிறார்.
அரதப்பழசான கதை அதற்கும் பழசான திரைக்கதை என இயக்குநர் எச்.வினோத் சொதப்பியிருக்கிறார்.
இதுதான் கதை என தொடக்கத்திலேயே சொல்லிவிட்ட பின், அரைமணி நேரத்துக்கு வெட்டியான காட்சிகள் இருப்பதால் ஆரம்பத்திலேயே சோர்வு வருகிறது.
மூன்று மணி நேரப் படத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் துள்ளுந்துகள் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. முதலில் ஈர்க்கும் அவை போகப்போக போரடிக்கின்றன. அதிலும் டியூக் எனும் நவீன துள்ளுந்து நிறுவனத்தினர் படக்குழு மீது நட்ட ஈடு கேட்டு வழக்கே போடலாம் என்கிற அளவுக்கு அந்த துள்ளுந்தை வைத்திருப்பவர்களைப் பார்த்தாலே பயப்படும்படி காட்சிகள் இருக்கின்றன.
குழந்தையை அழைத்துச் செல்லும் அம்மாவிடம் நகை அறுப்பது, குழந்தைகளுடன் மகிழுந்தில் செல்பவர்களை அவர்கள் கண் முன்னே கொடூரமாகச் சாகடிப்பது, வில்லன் கூட்டத்தில் ஒருவர் வேவு பார்ப்பதற்காக ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு வருவதென பல இடங்களில் குழந்தைகளைப் பயன்படுத்தி தவறிழைத்திருக்கிறார் இயக்குநர்.
அஜீத்தைத் திருப்திப்படுத்தினால் போதும் என காட்சிகள் அமைத்ததால் அதிக அதிருப்திக்கு ஆளாகிறார்.
படம் முழுக்க அஜீத் மட்டுமின்றி வில்லன், தம்பி, அம்மா என ஆளாளுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக்கொண்டேயிருக்கிறார்கள். கேட்கத்தான் முடியவில்லை.
காவல்துறை அதிகாரி கதாநாயகன் எனும்போது அதிலும் அஜீத் நடிக்கும்போது, என்கவுண்டர் எனும் அதிகாரக்கொலைகளை நியாயப்படுத்தாமல் அதற்கு எதிராகப் பேசியிருப்பது ஆறுதல்.
சிக்கலின் மூலத்தைக் கண்டடைந்து அதைச் சரிசெய்யவேண்டும் என்கிற பார்வையும் அதற்கான காட்சிகளும் இருப்பது நன்று.
அஜீத் இரசிகர்களுக்காக அஜீத் இரசிகர்களால் எடுக்கப்பட்ட படம் போல் இருப்பது பலவீனம்.











