மீண்டும் தள்ளிப்போகும் மாறன் – வலிமையே காரணம்?
கார்த்திக்நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் மாறன்.இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்முருதிவெங்கட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படம் சனவரி 14 பொங்கல்நாளிலேயே வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பின் பிப்ரவரி தொடக்கத்தில் வெளியாகும் என்றார்கள். அதற்கும் பிறகு பிப்ரவரி 18, 25 என தேதிகள் மாறிக்கொண்டேயிருந்தன. இப்போது மார்ச் முதல்வாரத்தில் வெளியிடவிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்படி தேதிகள் மாறிக்கொண்டேயிருப்பதற்கு சனவரி 18 ஆம் தேதி மனைவி ஐஸ்வர்யாரஜினியைப் பிரிவதாக
அறிவித்ததால் நிறைய எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன. அந்த நேரத்தில் படத்தை வெளியிடவேண்டாமென நினைத்ததாகச் சொல்லப்பட்டது.
ஆனால், பிப்ரவரி 25 ஆம் தேதியையும் தள்ளிவைக்க காரணம் அதுவல்லவாம்.
பிப்ரவரி 24 ஆம் தேதி அஜீத்தின் வலிமை படம் வெளியாகவிருக்கிறது. அதன் காரணமாக இந்தப்படத்தைத் தள்ளி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
அந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தப்படம் இணையத்தில் வெளியாகவிருக்கிறது. இரண்டுக்கும் என்ன சம்பந்தம்? என்றால், சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் அஜீத்தோடு நெருக்கமாக இருக்கிறது.அடுத்து அவரை வைத்துப் படமொன்று தயாரிக்கவிருக்கிறதாம். எனவே, அவர் படம் வெளியாகும் நேரத்தில் தங்கள் நிறுவனத்தின் படத்தை வெளியிடாமல் தள்ளிவைத்து முழுக்க எல்லோரும் அஜீத் படம் பற்றியே பேசவேண்டும் என்கிற எண்ணத்தில்தான் என்று சொல்கிறார்கள்.
ஒரு கதாநாயகனை வைத்துப் படம் தயாரிக்க வேண்டுமென்றால் ஒரு தயாரிப்பு நிறுவனம் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்று என்கிறார்கள்.











