சினிமா செய்திகள்

அன்புமணிக்கு சூர்யா பதில் சொல்வாரா? – ஜெய்பீம் நடிகர் தமிழ் பேட்டி

நடிகர் தமிழ், ஜெய்பீம் படத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். இராமேஸ்வரமதைச் சேர்ந்த அவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றிவிட்டு அதன்பின் திரைத்துறைக்குள் வந்திருக்கிறார்.

இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் பெயர் பிரபாகரன் , செங்கொடி என்பது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் ஒரு பேட்டி…..

1. காவல்துறையில் பணியாற்றிய நீங்கள் அதை விட்டுவிட்டு திரைத்துறைக்கு வந்தது எப்படி?

நான் காவல்துறையில் சேருமுன்பே திரைப்படத்துறைக்கு வரத்தான் விரும்பினேன். சூழல் காரணமாக வேலைக்குப் போன பின்பும் சென்னையில் பணியாற்றிக் கொண்டே திரைத்துறைக்குள் நுழையும் முயற்சிகளில் இடைவிடாமல் ஈடுபட்டேன். ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிட்டு இங்கே வந்துவிட்டேன்.

2. திரைத்துறையில் உங்கள் பயணம் பற்றி?

சினிமாவுக்குள் வந்ததும் வெற்றிமாறன் அண்ணனிடம் நான்கு படங்களில் உதவியாளராகப் பணியாற்றினேன்.இப்போது டாணாக்காரன் படத்தை இயக்கியுள்ளேன். நடிகராகவும் ஆகியிருக்கிறேன்.மொத்தத்தில் என் திரைப்பயணம் சிறப்பாகவே அமைந்திருக்கிறது.

3.ஜெய்பீம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது எப்படி?

என்னுடைய டாணாக்காரன் பட ஒளிப்பதிவாளர் மாதேஸும் இயக்குநர் த.செ.ஞானவேலும் உறவினர்கள். அவர் என்னை அறிமுகப்படுத்தினார். ஏற்கெனவே அசுரன் படத்தில் என் நடிப்பைப் பார்த்திருந்ததாலும் உண்மையாகவே காவல்துறையில் பணிபுரிந்ததாலும் என்னைத் தேர்ந்தெடுத்தார். திரைக்கதையைப் படிக்கக் கொடுத்தார். படித்ததுமே இது மிகப்பெரிய பதிவாக இருக்கும் என நினைத்தேன். நானே நடிக்கிறேன் என்று சொன்னேன். அப்போதிருந்து நான் குருமூர்த்தியாகவே மாறிவிட்டேன்.

4.ஜெய்பீம் படத்தில் உங்கள் வேடத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு பற்றி…?

இந்தப்படத்தில் நடித்தற்காக எனக்குக் கிடைத்த வரவேற்புகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. பாராட்டு, கிண்டல், மீம்ஸ் என எல்லா வகையிலும் சமூக வலைதளங்களில் நிறைந்திருக்கிறேன். நான் இயக்கிய படம் வெற்றியடைந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவேனோ அ்அவ்வளவு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.

5.இந்தப் படத்தில் நடித்தபோது நிஜத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய நாட்கள் நினைவுக்கு வந்தனவா?

நான் ஆய்வாளராப் பணியாற்றவில்லை. காவலராகத்தான் பணியாற்றினேன். ஆனால் பல ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுடன் இணைந்து வேலை செய்திருக்கிறேன். அந்த அனுபவங்களை எடுத்துக்கொள்ளாமல் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டுமென நினைத்தேன்.அதாவது, வழக்கமான வில்லன்கள் போல் கத்திக்கத்திப் பேசாமல் அமைதியாக அழுத்தமான முகபாவங்களை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்தேன். இயக்குநரும் நிறைய சொல்லிக்கொடுத்தார். இந்த வேடம் பெரிதாகப் பேசப்படுவதற்கு அவர்தான் காரணம்.

6.காவல்துறை பற்றிய மதீப்பீட்டைக் குறைக்கும் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி?

இது ஒரு திரைப்படம், திரைக்கதை. காவல்துறையைப்ஙபுகழும் படங்கள் வருவதுபோல் இது அத்துறையிலுள்ள சிக்கல்களைப் பேசியிருக்கிற படம். இப்படித்தான் நான் பார்க்கிறேன்.இதுஒட்டுமொத்த காவல்துறை மீதான மதிப்பைக் குறைத்துவிடும் என நான் நினைக்கவில்லை.

7.படத்தில் உங்கள் பெயர் மற்றும் வேடத்தையொட்டி பல சர்ச்சைகள் வந்துவிட்டன. அது குறித்து?

ஆமாம். அது சர்ச்சையாகியிருக்கிறது. அதற்கு இயக்குநர் சரியான விளக்கம் கொடுத்துவிட்டார். சம்பந்தப்பட்ட படமும் நீக்கப்பட்டுவிட்டது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டதென நினைக்கிறேன்.

8.சூர்யாவுக்கு அன்புமணி கேட்டுள்ள கேள்விகள் பற்றி?

இருவருமே எனக்கு அண்ணன்கள்தான். ஒரு அண்ணன் தன் தம்பிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு அவர் பதில் சொல்வார். அண்ணன் தம்பிகளுக்கான சிக்கலில் நான் சொல்ல ஒன்றுமில்லை.

9.நீங்கள் இயக்கியுள்ள டாணாக்காரன் படம் குறித்து சொல்லுங்கள்..

படம் முழுமையாகத் தயாராகிவிட்டது. படம் பார்த்த தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் எல்லாம் படம் சிறப்பாக வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். டிசம்பரில் படம் வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். திரையில் காண நானும் ஆவலாக இருக்கிறேன்.

10. ஜெய்பீம் படத்துக்குப் பிறகு நடிக்கும் வாய்ப்புகள் வந்துள்ளனவா?

சில நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வந்திருக்கின்றன. எனக்குப் பொருத்தமான வேடங்கள் இருந்தால் ஏற்று நடிப்பேன்.

– சுரா

Related Posts