சினிமா செய்திகள்

எஸ்.பி.பி ஜேசுதாஸ் கூட்டணி வாய்ப்பை இழந்தேன் – அரண்மனை 3 இசை குறித்து சி.சத்யா நேர்காணல்

இசையமைப்பாளர் சி.சத்யாவின் இருபத்தைந்தாவது படமாக அமைந்துள்ளது அரண்மனை 3. அப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, படம் வெளியான பின்பு பின்னணி இசைக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துவருகிறது.

இந்நிலையில் அவருடன் ஓர் உரையாடல்…. 

1. அரண்மனை 3 உங்களுக்கு 25 ஆவது படம். அது அமைந்தது மற்றும் பணியாற்றிய அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்…

2011 இல் எங்கேயும் எப்போதும் படம் மூலம் அறிமுகமானேன். பத்தாண்டுகளில் 25 படங்கள். சுந்தர்.சி சாரோடு இணையும் இரண்டாவது படம் என்னுடைய 25 ஆவது படமாக அமைந்ததும், ஏற்கெனவே புகழ்பெற்ற அரண்மனை வரிசைப் படத்தில் பணியாற்றியதும் மகிழ்ச்சியான அனுபவம். படத்தில் இணையும்போது, அரண்மனை 1, 2 ஆகியவற்றின் பாடல்கள் பெரிய வெற்றி. இந்தப்படத்தின் பாடல்களும் ஹிட்டாக வேண்டும் என்று சுந்தர்.சி சார் சொன்னார். அப்படியே நடந்திருப்பது சந்தோசம்.

2. ரசவாச்சியே, செங்காந்தளே ஆகிய அழகான சொற்களிலும், லொஜக்கு மொஜக்கு, ரட்டடபட ஆகிய ஓசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்களும் உள்ளன. திட்டமிட்டு இப்படிச் செய்தீர்களா?

இப்போதைய காலகட்டத்தில் லொஜக்கு மொஜக்கு போன்ற சவுண்டிங்கான பாடல்கள் இளந்தலைமுறையிடம் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.  செங்காந்தளே பாடல் கதையோடு இயைந்த பாடல். ஒரு காதல் பாடல் எனும்போது, உங்களுடைய விருப்பத்துக்குச் செய்யுங்கள் என்று சுந்தர்.சி சார் சொன்னார். அதன் விளைவாக உருவானதுதான் ரசவாச்சியே.அப்புறம், க்ளைமாக்ஸில் வரும் தீயாகத் தோன்றி பாடலுக்குப் பெரும் வரவேர்பு கிடைத்திருக்கிறது. அப்பாடலை நாட்டுராஜாதுரை என்பவர் எழுதியிருக்கிறார். அவருக்கு இதுதான் முதல்பாடல். அவரை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி.

3. பின்னணி இசை பெரும் கவனம் பெற்றிருக்கிறது. அதற்கு எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டீர்கள்..?

படம் தயாரானதும் எனக்குக் காட்டினார்கள்.கிராண்டியராக இருந்தது. அப்போது பின்னணி இசைக்குப் பெரும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்தேன். அதற்கு நிறைய உழைக்கவேண்டும் என முடிவுசெய்தேன். எப்படிச் செய்யப்போகிறோம் என்று பயந்திருந்த நேரத்தில் ஊரடங்கு வந்தது. அதனால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது, படத்தின் ரிசல்ட்டில் அதன்பலன் தெரிகிறது.

C.Sathya.

C.Sathya.

4. குறிப்பாக பேய் வரும்போது கொடுக்கப்பட்டுள்ள இசை வித்தியாசமாக இருக்கிறதே,அது பற்றி..?

அது செங்காந்தளே பாடல் இசையின் மேல் ஒரு குறிப்பிட்ட இசையைம் கலந்து அமைத்தேன்.அது கவனிக்கப்பட்டது, பலரும் அதைப்பற்றிப் பேசுகிறார்கள்.

5.ஹரிஹரன் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகியோரைத் திரையில் பாட வைத்திருப்பதும் நீங்களும் அதில் தோன்றியிருப்பது குறித்து…?

முதலில், எஸ்.பி.பி சார் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோரை வைத்து அந்தப்பாடலை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் சுந்தர்சி. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து எஸ்.பி.பி சாரும் ஒப்புக்கொண்டார். ஆனால் கொரோனா கொடூரத்தால் அதைச் செய்யவியலாமல் போய்விட்டது. ஒரு வரலாற்று வாய்ப்பை இழந்துவிட்டேன்.

6. ஓடிடியில் வெளியான விநோதயசித்தம் பெரும் வரவேற்புப் பெற்றிருக்கிறது. அப்படத்துக்கு இசையமைத்தது பற்றி..?

அப்படத்தின் கதை என் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்ததால் கேட்டவுடன் ஒப்புக்கொண்டேன். மிகக் குறைந்த நாட்களில் அப்படத்தின் வேலைகள் நிறைவடைந்தன. அப்படத்தில் சமுத்திரக்கனி வரும் காட்சிகளில் வித்தியாசமான இசை கொடுத்தேன். அதைப் பல இசைக்கலைஞர்கள் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசுகிறார்கள்.
படத்துக்குக்  கிடைத்துவரும் பாராட்டுகள் உற்சாகமளிக்கின்றன.

7.தனியிசைப் பாடல்கள் பெரிய வெற்றி பெறுகின்றன.அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்..?

திரைப்படப்பாடல்கள் மட்டும்தான் மக்களிடம் சென்று சேரும் என்கிற நிலை மாறி தனியிசைப் பாடல்களும் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன. இதனால், எங்கள் எண்ணப்படி பாடல்களை உருவாக்கவும் எதிர்காலத்தில் பல புதிய திறமையாளர்கள் வரவும்வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இது மிக மிக நல்ல விசயம்.

8.இப்போது பணியாற்றும் படங்கள்..?

த்ரிஷா நடித்துள்ள ராங்கி, பிரபுதேவாவின் தேள், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் ஆயிரம் ஜென்மங்கள், ஆரி  நடிப்பில் உருவாகியிருக்கும் அலேகா ஆகிய படங்கள் தயாராக இருக்கின்றன.

9. புதிய படங்கள்…?

கொரோனா காலத்திலும் தனி ஆல்பம் மற்றும் தொடர்ந்து பட வேலைகள் இருந்தன. இப்போதுதான் கொஞ்சம் ஓய்வாகியிருக்கிறேன். புதுப்படங்கள் குறித்த பேச்சுகள் நடக்கின்றன. விரைவில் சொல்கிறேன்.

10. அரண்மனை 3 யில் தோன்றினீர்கள். நடிக்கும் திட்டம் இருக்கிறதா?
கேமிரா முன்னால் நிற்க எனக்குக் கூச்சம் அதிகம். அதனால் நடிப்பது குறித்துச் சிந்திக்கவில்லை.

– சுரா

Related Posts