விமர்சனம்

சிவகுமாரின் சபதம் – திரைப்பட விமர்சனம்

மிகவும் உணர்வுப் பூர்வமான விசயங்களை விளையாட்டாக அணுகுவதே இன்றைய இளைய தலைமுறையைக் கவரும் உத்தி என்று நினைத்துப் பயணிக்கும் ஹிப்ஹாப் தமிழாவின் படங்களின் வரிசையில் இன்றொன்று சிவகுமாரின் சபதம்.

காஞ்சிபுரத்தில் பாரம்பரியமான பட்டு நெசவாளர் ஒருவர் கதை நாயகன். அவர் மகனுக்குத் திருமணம் நடக்கும் அதே நாளில் அவர் மனைவிக்குக் குழந்தை பிறக்கிறது.

அந்தக்குழந்தை வளர்ந்து ஆளாகிறது என்றால் வழக்கமான கதையாகிவிடும் என நினைத்து, அதன்பின் மகனுக்குக் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைதான் கதாநாயகன் சிவகுமார் என்று வைத்திருக்கிறார்கள்.

ஹிப்ஹாப் தமிழா அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அவருடைய பாணியிலேயே நடித்திருக்கிறார். படத்தின் தலைப்புக்கேற்ப அடிக்கடி ஏதாவதொரு சபதம் போடுகிறார். அவர் மட்டுமின்றி அவர் தாத்தாவும் சபதம் போடுகிறார். அப்புறம் ஆளாளுக்கு சபதம் போடுகிறார்கள்.

இப்படியே போய் கடைசியில், பணம் சம்பாதிப்பது முக்கியமில்லை, நல்ல மனிதர்களைச் சம்பாதிப்பதே முக்கியம் என்று சொல்லி படத்தை முடிக்கிறார் எழுதி இயக்கியிருக்கும் ஹிப்ஹாப் தமிழா.

நாயகி மாதுரி, ஹிப்ஹாப்பின் இளமைத்துள்ளலுக்கு முன்னால், பின்னால் நிற்கிறார்.

தாத்தாவாக நடித்திருக்கும் இளங்கோகுமணன் புதுவரவு. நல்வரவு.

கதாநாயகனின் சித்தப்பாவாக வரும் பிராங்க் ராகுல் மோசமில்லை.

நகைச்சுவைக்கென நாயகனின் நண்பராக வரும் ஆதித்யா கதிர், சிரிக்க வைக்கிறார்.

வில்லியாக நடித்திருக்கும் ரஞ்சனா நாச்சியார், அவருடைய அண்ணன் விஜய் கார்த்திக் ஆகியோர் பொருத்தம்.

அர்ஜுன்ராஜாவின் ஒளிப்பதிவு தேவையான அளவு இருக்கிறது.

ஹிப்பஹாப்பின் இசையில் பாடல்கள் படத்துக்குப் பலம். பாடல்களிலும் தத்துவம் கொட்டிக்கொண்டிருக்கிறது.

இன்றைய இளைஞர்களுக்கு இவ்வளவு போதும் என்று முடிவு செய்து தனக்குத் தெரிந்த மாதிரி எழுதி இயக்கியிருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா.கதைக்களம் காஞ்சிபுரம் என்பதால் பட்டுப்புடவைகள் பற்றி பல விவரங்கள் பேசியிருக்கிறார்கள்.

உற்பத்தியாளர்களை விட தரகர்கள் அதிகம் சம்பாதித்து வளமாக இருக்கிறார்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.

திரை வடிவத்துக்குக் கொஞ்சம் கீழே, கலை வடிவத்துக்குச் சம்பந்தமில்லை.

Related Posts