மு.க.ஸ்டாலினுடன் விஜய் சந்திப்பும் அதனால் ஏற்பட்டுள்ள சர்ச்சையும்
2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்கிற உயர்தர மகிழுந்தை இறக்குமதி செய்தார்.இந்த மகிழுந்துக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதற்குத் தடை கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்காக நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதற்கு எதிராக விஜய் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக,ஒரு இலட்சம் கட்ட வேண்டியதில்லை என்றும் ஏற்கெனவே செலுத்திய நுழைவு வரி 20 விழுக்காடு போக, எஞ்சியுள்ள 80 விழுக்காடு நுழைவு வரியை, நடிகர் விஜய் ஒரு வாரத்திற்குள் செலுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், அந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, தமிழக அரசு வழக்குரைஞர் விஜய் வரி செலுத்திவிட்டார் என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்.
விஜய் வழக்கில் அரசு வழக்கறிஞர் வந்து வரி கட்டிவிட்டார் என்று சொல்லியிருப்பது மிகச் சாதாரண செய்தி என்றாலும் அண்மையில் நடந்த நிகழ்வு காரணமாக அது சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறதாம்.
என்ன நடந்தது?
சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கலைஞர் கருணாநிதியின் மகளான செல்வியின் பேத்தி ஓவியாவின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
நடிகர் விஜய்க்கும் அழைப்புவிடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது மனைவி சங்கீதாவுடன் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் அவர் நிகழ்ச்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அப்போது,முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் விஜய் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் உலவிக்கொண்டிருக்கிறது. அப்புகைப்படத்தில் அமைச்சர் சேகர்பாபுவும் உடனிருக்கிறார்.
முதலமைச்சருடான இந்தச் சந்திப்பின் விளைவே நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் விஜய்க்கு சான்றிதழ் அளித்துள்ளார் என்கிற சர்ச்சை உருவாகியிருக்கிறது.
ஏற்கனவே, சார்பட்டா பரம்பரை பட வியாபாரம் சம்பந்தமாக உதயநிதியை ஆர்யா சந்தித்தார். அதன்பின் ஈழ்த்தமிழ்ப்பெண்ணை ஏமாற்றியதாகச் சொல்லப்பட்ட வழக்கிலிருந்து ஆர்யா விடுவிக்கப்பட்டார்.
பிரபலமாக இருப்பவர்கள் குறிப்பாக ஆளும்கட்சியில் இருப்பவர்கள் யாரைச் சந்தித்தாலும் அதனால் இம்மாதிரி சர்ச்சைகள் கிளம்புவது ஆரோக்கியமானதா? என்பது ஆய்வுக்குரியது.











