சூர்யா தயாரித்துள்ள 4 படங்கள் ஓடிடி வெளியீடு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சூரியாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள நான்கு படங்கள் நேரடியாக இணையதளத்தில் வெளியாகவிருக்கின்றன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்……
எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகிறது என்பதை அமேசான் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் மணி கண்டன் ஆகியோருடன் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’.
சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடித்த குடும்ப ஃபேமிலி டிராமா ஜானரில் தயாரான ‘உடன்பிறப்பே’.
அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினை ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய ‘ஓ மை டாக்’.
ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த நையாண்டி நகைச்சுவையை மையப்படுத்திய ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’.
இந்நான்கு படங்களும் திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கின்றன.
2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான சூர்யா இதுதொடர்பாக பேசுகையில்,
கடந்த ஆண்டு பெரும் மாற்றமாக அமைந்தது. முன்னோடிகள் இல்லாத சூழ்நிலையில், திரைப்பட வெளியீட்டின் பல்வேறு புதுமைகளை நாங்கள் மேற்கொண்டோம். 2டி நிறுவனத்தின் அண்மைய திரைப்பட வெளியீடுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையாக அமேசான் இருக்கிறது. பொன்மகள் வந்தாள் முதல் சூரரைப்போற்று வரை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடைந்தது. இதற்கு காரணமான அமேசான் பிரைம் வீடியோ உடன் தொடர்ந்து தொழில்ரீதியான ஒத்துழைப்பை நீட்டிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்’ என்கிறார்.
ஜெய் பீம் (நவம்பர் 2021) த,செ.ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’. ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். இது பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்து வருகிறார்கள். ராஜககண்ணு போலீசாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனை தேடத் தொடங்குகிறாள். இது தொடர்பாக பிரபல உயர்நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே ஜெய் பீம் கதை. ஒளிப்பதிவு எஸ்ஆர் கதிர், இசை ஷான் ரோல்டன், கலை கே கதிர் ,படத்தொகுப்பு பிலோமின், உடைகள் பூர்ணிமா ராமசாமி.
உடன்பிறப்பே (அக்டோபர் 2021)
இயக்குனர் இரா சரவணன் இயக்கிய திரைப்படம் ‘உடன்பிறப்பே’.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் உடன்பிறப்புகள் வைரவன் மற்றும் மாதங்கி ஆகியோருக்கு இடையேயான நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. நீதிக்காக வன்முறை வழியில் போராட வேண்டும் என வைரவனனும், சட்ட விதிகளின் படி விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும் என மாதங்கியின் கணவர் சற்குணமும் வலியுறுத்துகின்றனர். பல ஆண்டுகளாக அவர்களுக்கிடையேயான விரிசலை நீக்கவும், குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவும் மாதங்கி எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகிறது. இறுதியில் இந்த குடும்ப ஒற்றுமைக்காக மாதங்கி எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுதான் ‘உடன்பிறப்பே’. இசை டி.இமான், ஒளிப்பதிவு வேல்ராஜ், படத்தொகுப்பு ரூபன், கலை இயக்கம் முஜிபூர், உடைகள் பூர்ணிமா ராமசாமி.
ஓ மை டாக் (டிசம்பர் 2021)
அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கிய இந்த திரைப்படம். குழந்தைகளின் உலகம், அவர்களின் ஆசை, துணிச்சல், தைரியம், நட்பு, நிபந்தனையற்ற அன்பு மற்றும் விஸ்வாசம் குறித்து பேசும் ஒரு அற்புதமான திரைப்படம். பிறவி குறைபாடு காரணமாக ஒரு நாய்க்குட்டியை அதன் எஜமானர்களால் கொல்ல உத்தரவிடப்படுகிறது. ஆனால் அது இறுதியில் கொலையாளிகளிடமிருந்து தப்பிக்கிறது. ஒரு பையன் =அனைவராலும் வெறுக்கப்படுகிறான். நல்ல மாணவன் அல்ல, பக்கத்து வீட்டு அழகான பையனும் அல்ல. ஆனால் மிகவும் மகிழ்ச்சியான =அதிர்ஷ்ட குழந்தை. நாய்க்குட்டியும், அந்த பையனும் சந்திக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் இதயங்களை வென்று தங்களை தகுதியுள்ளவர்களாக நிரூபிக்கிறார்களா? என்பதே இப்படத்தின் கதை. ஒளிப்பதிவு கோபிநாத், இசை நிவாஸ் கே பிரசன்னா, எடிட்டர் மெகா, கலை மைக்கேல் ,உடைகள் வினோதினி பாண்டியன்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் (செப்டம்பர் 2021)
இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கிய இந்த நகைச்சுவைத் திரைப்படம், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒரு கிராமத்தைப் பற்றிய செய்தி வெளியாகிறது. ஆனால் அந்த கிராம மக்களுக்கு டிவி பார்க்க மின்சாரம் இல்லை. குனிமுத்து 35 வயதான அப்பாவி. விவசாயி. கருப்பன் மற்றும் வெள்ளையன் என்ற தனது காளைகளை இழக்கிறார். அவருக்கும் அவரது மனைவி வீராயிக்கும் குழந்தைகளைப் போல் அந்த காளைகள் இருந்தது. அவர் தனது நண்பர் மாந்தினியுடன் தனது காளைகளை தேட தொடங்குகையில், அவர் தற்செயலாக நர்மதா என்ற நிருபரை சந்திக்கிறார். அவர் அவர்களுக்கு உதவுகிறார். பெரும் போராட்டத்தின் மத்தியில் காளைகளை கண்டுபிடிக்க வேண்டும். கிராமத்தையும் மேம்படுத்த வேண்டும். இது நடந்ததா? என்பதே இத்திரைப்படத்தின் கதை. ஒளிப்பதிவு சுகுமார், இசை கிரீஷ், படத்தொகுப்பு சரவணன், கலை முஜிபூர், உடைகள் வினோதினி பாண்டியன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.











