குருநாதர் கே.எஸ்.ரவிக்குமாரை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் – கூகுள்குட்டப்பா பட சுவாரசிய அனுபவங்கள்
பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் சொந்தப் பட நிறுவனமான ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம்‘தெனாலி’. கமல், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த அந்தப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’.
இப்படத்தில் கே. எஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லொஸ்லியா மற்றும் யோகி பாபு, பூவையர், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர்களாக சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் ஆகிய இரட்டை இயக்குநர்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமாரிடம் உதவியாளர்களாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களில் சபரிகிரீசன் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்வி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, பிரவீண் ஆண்டனி படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். அறிமுக கலை இயக்குநரான சிவா கலை இயக்கத்தை கவனிக்கிறார். பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா, ‘என்ஜாய் என்ஜாமி’ புகழ் அறிவு ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முதல்பார்வையை நடிகர் சூர்யா நேற்று (ஆகஸ்ட் 3.2021) மாலை ஆறு மணியளவில் தன் இணையப்பக்கத்தில் வெளியிட்டார்.

Ajith – Director Saravanan
படத்தைப் பற்றி இரட்டை இயக்குநர்கள் பேசுகையில்,
மலையாளத்தில் ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் யோகி பாபுவின் காமெடியுடன், கிராபிக்ஸ் காட்சிகளுடன் சேர்த்து திரைக்கதையை சுவராசியப்படுத்தியிருக்கிறோம். ஆறு வயது முதல் அறுபது வயது வரையுள்ள அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக ‘கூகுள் குட்டப்பா’ உருவாகியுள்ளது. இப்படத்தில் ரோபோ ஒன்று முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறது. அது செய்யும் குறும்புத்தனமான சேட்டைகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் உற்சாகப்படுத்தும். என்றனர்.
முதல்படத்திலேயே குருநாதரை இயக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவம் எப்படி இருந்தது? என்று கேட்டதற்கு, இது வேறு யாருக்கும் கிடைக்காத கொடுப்பினை. படப்பிடிப்புக்குப் போகும் நேரத்தில் நாங்கள் பயத்துடன் இருந்தோம், ஆனால் எங்கள் குருநாதர் எல்லாவற்றையும் எளிமையாக்கிவிட்டார் என்றவர்களிடம், ஒரே டேக்கில் நடித்துவிடுவாரா? ரீடேக் கேட்டீர்களா? என்று கேட்டதற்கு, பெரும்பாலும் ஒரேடேக்கில் சிறப்பாகச் செய்துவிடுவார்.ஒருசில நேரங்களில் ரீடேக் கேட்டாலும் எங்களை ஊக்குவிக்கும்விதமாக சிறப்பாகச் செய்துகொடுப்பார் என்கிறார்கள்.
மேலும், எங்கள் குருநாதரின் அனுபவத்தைப் பின்பற்றியதன் விளைவாக திட்டமிட்டதைவிட முன் கூட்டியே படப்பிடிப்பை முடித்துவிட்டோம்,இன்னும் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. படம் சிறப்பாக வந்திருக்கிறது என்கின்றனர் மகிழ்ச்சியுடன்.











