மூத்த நடிகரை ஏமாற்றிய மணிரத்னம்
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், கார்த்தி, விக்ரம்,ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், அஸ்வின், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், கலை இயக்குநராக தோட்டாதரணி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு 2019 டிசம்பரில் தொடங்கியது. அதன்பின் பல தடைகள் சிக்கல்களைத்தாண்டி படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது.
இரண்டு பாகங்களாக வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல்பாகத்துக்கான பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் முதல்பாகம் நிறைவு பெற்றுவிடும் என்கிறார்கள்.
இந்நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் வந்துள்ளது.
இதனால் வேலைகள் நின்றுபோயிருக்கிறது.
இதற்கிடையே தமிழின் மூத்தநடிகர் விஜயகுமார், மணிரத்னம் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
ஏன்?
பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கியமான வேடம் இருக்கிறது, அதில் நீங்கள்தான் நடிக்கிறீர்கள், அதற்காகத் தாடி வளர்க்க வேண்டும் என்று சொன்னார்களாம். அவரும் ஆறு மாதங்களுக்கு மேலாக முடிவெட்டாமல் தாடி வளர்த்துக் காத்திருந்தாராம். கடைசிவரையில் அவருக்கு மணிரத்னத்திடமிருந்து அழைப்பு வரவேயில்லையாம்.
அவருக்குச் சொன்ன வேடத்தில் வேறொரு நடிகரை ஒப்பந்தம் செய்து நடிக்கவும் வைத்துவிட்ட விசயத்தைத் தாமதமாகத் தெரிந்து கொண்ட விஜயகுமார் கடும்சொற்களில் மணிரத்னத்தைத் திட்டித்தீர்த்துவிட்டதாகத் தகவல்.











