September 14, 2026
சினிமா செய்திகள்

திரைத்துறைக்கு வரவிருக்கும் பேராபத்தைத் தடுக்க கமலைச் சந்தித்த வெற்றிமாறன்

நேற்றிலிருந்து வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிக்கப்போவதாகச் செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன. இது உண்மையா? என்றால் இல்லையாம்.

அண்மையில் இயக்குநர் வெற்றிமாறன் கமலைச் சந்தித்திருக்கிறார். அந்தச் சந்திப்புக்குக் காரணம், மோடி அரசாங்கத்தால் திரைப்படத்துறைக்கு வரவிருக்கும் மிகப்பெரிய ஆபத்து ஒன்றைத் தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து போராடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகவே கமலைச் சந்தித்தாராம்.

ஜூலையில் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, திரைப்படத்துறை தொடர்பாகப் புதியசட்டம் ஒன்றை இயற்றவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்போது, தணிக்கைச் சான்று பெற்ற பின்பு வெளியாகும் திரைப்படங்கள் மீது விமர்சனம் இருந்தால் சட்டப்படி ஒன்றும் செய்யவியலாது. இப்போது கொண்டுவரப்படுகிற புதிய சட்டத்தின்படி (சூப்பர் சென்சார்) திரையரங்குகளில் படம் வெளியான பின்பு அப்படத்தின் மீது பலர் சேர்ந்து புகார் கொடுத்தால், அப்படத்தைத் தடை செய்யவும், படத்தை உருவாக்கியவர்களைக் கைது செய்யவும் முடியும் என்கிறார்கள்.

இச்சட்டம் படைப்பாளிக்ளின் உரிமைகளை முற்றாகப் பறிக்கும் சட்டம் என்பதால் அறிமுக நிலையிலேயே இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும், அதற்காக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கமலிடம் கேட்பதற்காகவே அவரைச் சந்தித்திருக்கிறார் வெற்றிமாறன்.

இத்தகவலைக் கேட்டு அதிர்சியடைந்த கமல், இப்படி ஒரு சட்டம் வரவே கூடாது அனைவரும் இணைந்து தடுத்து நிறுத்துவோம் என்று சொல்லியிருக்கிறாராம்.

இச்சட்டத்திற்கு எதிராக அனைத்து வகைகளிலும் போராடத்தயாராகி வருகிறார் வெற்றிமாறன். அது தொடர்பாக கமல் மட்டுமின்றி மேலும் பலரைச் சந்தித்துவருகிறாராம்.

வெற்றிமாறனின் முயற்சி வெற்றியடைவது திரைத்துறைக்கு நல்லது.

Related Posts