சினிமா செய்திகள்

இரண்டாவது முறையாக இயக்குநர் மாற்றம் – அப்பா மீது பிரசாந்த் அதிருப்தி

2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்திப்படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தின் தமிழ் மொழி மாற்று உரிமையை நடிகர் தியாகராஜன் கைப்பற்றி தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தப் படத்தின் இயக்குநராக முதலில் மோகன் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.பல காரணங்களால் அவர் மாற்றப்பட்டார்.

அதன்பின், இந்தப்படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியில் தபு நடித்த வேடத்தில் தமிழில் சிம்ரன் நடிக்கிறார் என்றும் அவர் தவிர இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிகர் கார்த்திக் ஆகியோர் இந்தப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும் அறிவித்தார்கள்.

2021 சனவரி முதல்நாளில் இப்படத்துக்கு அந்தகன் என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார்கள். அப்போதே இப்படம் 2021 கோடைவிடுமுறையில் வெளீயாகும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

ஆனால் இப்போதுவரை அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை.ஏனென்று விசாரித்தால்?

இப்படத்தின் இயக்குநராக அறிவிக்கப்பட்ட ஜே.ஜே.பிரட்ரிக் உட்பட படக்குழுவினர் பெரும்பாலோனோர் இப்படத்தில் வேலை செய்யப்போவதில்லை என்று சொல்லி விலகிவிட்டார்களாம்.

ஜே.ஜே.பிரட்ரிக்கை இயக்குநராக ஒப்பந்தம் செய்துவிட்டாலும் தொழில்நுட்பக்கலைஞர்கள் ஒப்பந்தம் உள்ளிட்ட எல்லா விசயங்களிலும் அவர் சொல்வதைக் காது கொடுத்துக் கூடக் கேட்காமல் தன்னிஷ்டத்துக்கு தொழில்நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்யத் தொடங்கினாராம்.

இதனால் ஜே.ஜே.பிரட்ரிக், சந்தோஷ்நாராயணன் உட்பட அனைவரும் படத்திலிருந்து விலகிக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்களாம்.

இதைச் சற்றும் எதிர்பாராமல் திகைத்த தியாகராஜன் அவர்களைச் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டாராம். அதேநேரம் இயக்குநர் தரணி உள்ளிட்ட சில இயக்குநர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.

எதுவும் ஒத்துவரவில்லையாம். அதனால் கடைசியாக இந்தப் படத்தைத் தானே இயக்குவதாகச் சொல்லி வேலைகளைத் தொடங்கியிருக்கிறாராம்.

இதுவரை தியாகராஜன் செய்தவற்றை அப்படியே ஏற்றுக்கொண்ட பிரசாந்த் இப்போது கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts