திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு – பிரபல நடிகர் காரணமா?
தமிழ்த்திரையுலகில் கடந்த நாற்பதாண்டுகளாக முக்கியப் புள்ளியாக இருந்து கொண்டிருப்பவர் திருப்பூர் சுப்பிரமணியம்.
திரையரங்கு உரிமையாளர், திரைப்பட விநியோகஸ்தர் ஆகிய அவர், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களில் பொறுப்பு வகித்தவர்.
அண்மையில்,தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) தொடங்கப்பட்டது.
அப்படி ஒரு சங்கம் தொடங்கலாம் என்கிற எண்ணத்தை உருவாக்கி அதைச் செயல்படுத்துவதில் முன்னின்று அந்தச் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலும் இருக்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
சில நாட்களுக்கு முன்பாக, இவருடைய திரையரங்கு, அலுவலகம், வீடு, தோட்டம் உள்ளிட்ட 17 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
ஒருநாள் அதிகாலை ஆறு மணிக்கு பதினேழு இடங்களில் சோதனையைத் தொடங்கிய அதிகாரிகள், நான்குநாட்கள் வரை சோதனை செய்ததாகச் சொல்லப்படுகிறது.
திருப்பூர் சுப்பிரமணியத்துக்குச் சொந்தமான ஓர் இடத்தில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்படுகிறதோ என்று ஐயப்படுகிற அளவு அதிகாரிகள் முதல் பியூன்கள் வரை அங்கே இருந்திருக்கின்றனர்.
திருப்பூர் சுப்பிரமணியம் சமப்ந்தப்பட்ட ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இச்சோதனை தொடர்பாக இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியிடப்படவில்லை.
திடீரென இவ்வளவு பெரிய சோதனை நடக்கக் காரணம் என்ன? என்பது பற்றி திரையுலகில் கசியும் செய்திகள்…
ஃபைனான்சியர்கள் சங்கம் என்று ஒரு அமைப்பை உருவாக்கியதே தவறு, கந்துவட்டித் தடைச் சட்டங்கள் உள்ள நாட்டில் கந்துவட்டி கொடுப்பவர்கள் சங்கம் வைப்பதா? என்கிற ஆளும்வர்க்கத்தின் கோபத்தின் வெளிப்பாடுதான் இது என்கிறார்கள்.
இன்னொரு பக்கம், ஒரே நேரத்தில் பல ஃபைனான்சியர்களிடம் பணம் வாங்கிவிட்டு அதைச் சொன்னபடி திருப்பித்தராமல் ஏமாற்றினாராம் ஒரு பிரபல நடிகர்.
ஃபைனான்சியர்கள் சங்கம் என்கிற ஓர் அமைப்பே அவரைக் கட்டுப்படுத்தவே உருவாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டது. அந்த நடிகர், மத்திய அரசில் தன்க்கிருக்கும் செல்வாக்கைப் பயன்ப்டுத்தியே இந்த வருமானவரித்துறை சோதனை நடக்கக் காரணமாக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.











