தனுஷ் படங்கள் வரிசையில் மீண்டும் நடந்த மாற்றம்
தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இதற்கடுத்து, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். நடிகை ஸ்முருதி வெங்கட் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 8 ஆம் தேதி சென்னையில் பிரபல ஸ்டுடியோவில் பூசையுடன் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பாக ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் தனுஷ் பாடிய பாடலுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது.
இதற்கு முன்பாக, தனுஷின் 43 ஆவது படத்தை ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்குவதாகச் சொல்லப்பட்டது. இப்போது, தனுஷ் -ராம்குமார் திரைப்படம் மெகா பட்ஜெட் மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக அதிக நேரத்தேவை காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் “தனுஷ் 43 ” அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது என்று சொல்லியிருந்தார்கள்.
இதனால், கார்த்திக் நரேன் இயக்கும் படம், தற்போது நடிக்கும் ஆங்கிலப்படம், அதற்கடுத்து செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் ஆகிய படங்களில் வரிசையாக நடிப்பார் என்றும் இவற்றை முடித்துவிட்டு ராட்சசன் இயக்குநர் ராம்குமார் இயக்கும் படத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.
இப்போது அதிலும் மாற்றம் நடந்திருக்கிறதாம். ராம்குமார் இயக்கும் படம் மேலும் தள்ளிப்போவதாகவும் அதற்கு முன்பாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பிலேயே பாலாஜிமோகன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.











