சியான்கள் – திரைப்பட விமர்சனம்
கொஞ்சம் கொஞ்சமாக அருகிக் கொண்டிருக்கும் உறவுகள் மீதான அன்பு, மூத்தோருக்கு மரியாதை உள்ளிட்ட உணர்வுகளை மீட்டெடுக்கும் படைப்பாக வந்திருக்கிறது சியான்கள்.
நாயகனாக நடித்திருக்கும் கரிகாலன் ஏற்றிருக்கும் பாத்திரத்துக்குப் பொருத்தமான புதுவரவு. காதல் காட்சிகளில் இன்னும் முன்னேறவேண்டும்.
நாயகி ரிஷாஹரிதாஸ் அளவான அழகு. கண்களால் காதலைச் சொல்லுமிடம் நன்று.

chiyangal
நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரைசுந்தரம், சமுத்திரசீனி,சக்திவேல்,நாராயணசாமி ஆகிய 7 பேர்தான் படத்தலைப்புக்கானவர்கள்.
எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று ஒற்றைவரியில் சொல்வது அவர்களுக்குச் செய்யும் மரியாதைக்குறைவு.பாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள்.
பேரக்குழந்தையின் விமான பொம்மையை ஒளித்து வைத்து விளையாடும் நேரத்தில் சின்னக்குழந்தையாகவே மாறிவிடுகிறார் நளினிகாந்த். அந்தக்காட்சி மூலம் இரண்டாம் குழந்தைமையை உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
கோயில் கிடாயைக் கடத்துவது, பக்கத்துக்கு ஊருக்குச் சென்று பெண்ணைத் தூக்குவது என்று அதகளம் புரிகின்றனர்.
வயதான பெண்மணி தன் காதல் உணர்வை வெளிப்படுத்துமிடம் ஒட்டுமொத்த பெண்ணினத்தின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தும் இடம்.
பாபுகுமாரின் ஒளிப்பதிவு கிராமம், நகரம் ஆகியனவற்றை மட்டுமின்றி மனித உணர்வுகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறது.
முத்தமிழின் இசை சுகம். ஒட்டி ஒட்டி நானும் வாரேன் பாடல் கேட்டதும் பிடிக்கும்.கேட்கக் கேட்க இனிக்கும். கதை சொல்லவரும் உணர்வுகளை பின்னணிஇசை மூலம் உணரவைத்திருக்கிறார். இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
தேனி மாவட்டத்திலுள்ள ஓர் அழகான கிராமத்தைப் பின்புலமாக வைத்துக் கொண்டு நல்ல கதாபாத்திரங்களை வடிவமைத்ததோடு சிறந்த கருத்தைப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து சொல்லியிருக்கும் இயக்குநர் வைகறைபாலன் வரவேற்புக்குரியவர்.











