சினிமா செய்திகள்

மாஸ்டர் படக்குழு திடீர் அறிக்கை வெளியிடக் காரணம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் அவ்வப்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், நேற்று முதல் ‘மாஸ்டர்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனவும், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் பெரும் விலைக்கு வாங்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து ‘மாஸ்டர்’ படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…..

நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடரும் இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக, நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறோம்.

‘மாஸ்டர்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் கொண்டாட இரசிகர்கள் எவ்வளவு தூரம் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களைப் போலவே நாங்களும் அந்த மிகப்பெரிய தினத்துக்காகக் காத்திருக்கிறோம்.

கடந்த சில நாட்களாகப் பல வதந்திகள் உலவி வரும் நிலையில் அதற்குத் தெளிவு தர விரும்புகிறோம். பிரபலமான ஓடிடி தளத்திலிருந்து படத்தை வாங்க பேசப்பட்டாலும் நாங்கள் திரையரங்க வெளியீட்டையே விரும்புகிறோம். அதுவே தற்போது நிலவி வரும் நெருக்கடியில் திரைத்துறைக்கு முக்கியத் தேவையாகும்.

தமிழ்த் திரைத்துறையை மீட்டெடுக்கத் திரையரங்க உரிமையாளர்களும் எங்களுடன் நின்று எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். விரைவில் நல்ல செய்தியுடன் உங்களைச் சந்திக்கிறோம். பாதுகாப்பாக இருங்கள்”

இவ்வாறு ‘மாஸ்டர்’ படக்குழு தெரிவித்துள்ளது.

மாஸ்டர் பட வெளியீட்டின்போது வசூலில் ஆளுக்கு எவ்வளவு பங்கு என்பதில் தயாரிப்புத்தரப்புக்கும் திரையரங்குத் தரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே ஓடிடியில் படத்தை வெளியிடும் முயற்சி நடந்தது.

இதுதொடர்பாக இருதரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுவிட்டதா? என்றால் இன்னும் இல்லை என்கிறார்கள். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறதாம். இந்நிலையில் இப்படி ஒரு அறிக்கை வரக்காரணம் விஜய்தான் என்கிறார்கள்.

இப்படம் திரையரங்குகளில்தான் வெளியாகும் என்பதை உறுதியாக அறிவித்துவிடுங்கள்,அதன்பின் திரையரங்குக்காரர்கள் நம்மோடு முழுமனதாக ஒத்துழைப்பார்கள் என்று சொன்னதாகவும் அதனால் இந்த அறிக்கை வெளியானதாகவும் சொல்லப்படுகிறது.

Related Posts