இரண்டாம்குத்து படத்துக்கு பாரதிராஜா எதிர்ப்பு – உடனடி விளைவு என்ன?
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நாயகனாகவும் நடித்துள்ள படம் இரண்டாம் குத்து. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம்பாகம் இது.
இப்படத்தின் முதல்பார்வை மற்றும் குறுமுன்னோட்டம் ஆகியன அணமையில் வெளியிடப்பட்டது.
அவை வெளியானதிலிருந்து அப்படக்குழுவினருக்குக் கடும் எதிர்ப்புகள். இவ்வளவு மோசமாக படம் எடுப்பதா? என்று பலதரப்பிலிருந்தும் கேள்விக் கணைகள்.
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், இயக்குநர் பாரதிராஜா, இப்படத்துக்கு எதிராகக் கடுமையாகப் பேசியிருக்கிறார்.
இன்று காலை இவ்வறிக்கை வெளியானபிறகு படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.
என்ன காரணம்?
இப்படத்தை வாங்கி வெளியிடுபவர் ராக்ஃபோர்ட் முருகானந்தம். அவர் தற்போது இப்படத்தின் வியாபாரம் பேசிக் கொண்டிருக்கிறாராம்.
ஒரு விநியோகப்பகுதியில் இப்படத்துக்கு ஐம்பது இலட்சம் விலை சொல்லிக் கொண்டிருந்தார்களாம். அதற்கே வாங்குபவர் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பாரதிராஜாவின் அறிக்கை வெளியானது.
படத்துக்கு எதிர்ப்பு வந்தால் வியாபார ரீதியாக வெற்றி கிடைக்கும் என்று நம்பும் விநியோகஸ்தர்கள் அதிக விலை கொடுப்பதாகக் கூறி படத்தின் உரிமையைக் கேட்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதனால் பாரதிராஜாவின் எதிர்ப்பு எங்களுக்கு இலவச விளம்பரம் என்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.
கற்பூரம் விற்றாலும் அது வியாபாரம்தான் கள்ளச்சாராயம் விற்றாலும் அது வியாபாரம்தான். கற்பூரம் விற்கிறவரை விட கள்ளச்சாராயம் விற்கிறவருக்கு அதிகப்பணம் கிடைக்கலாம்.
ஆனால் சமுதாயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் மரியாதை முற்றிலும் வேறுபடக்கூடியது. இதைத்தான் பாரதிராஜா கூறியிருக்கிறார். இதைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறவர்களை என்ன சொல்வது?












