இயக்குநராகிறார் ஒய்நாட் சசி – நாயகர்கள் யார் தெரியுமா?

2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப்படம் மூலம் தயாரிப்பு நிறுவனமாக தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான நிறுவனம் ஒய்நாட்ஸ்டுடியோஸ்.
அதன்பின், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா அண்மையில் வெளியாகி தேசியவிருது பெற்ற மண்டேலா உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்துள்ளது அந்நிறுவனம்.
அந்நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர் சசிகாந்த்.
முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவாஜியின் மகனான அவர், ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக தன் அடையாளத்தை அழுத்தமாகப் பதித்துள்ளார்.
இப்போது அவர் இயக்குநராகவும் அவதாரம் எடுக்கிறார்.
அவர் இயக்கவிருக்கும் படத்துக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
அந்தப்படத்தில் மாதவன், சித்தார்த் ஆகிய இருவரும் நாயகர்களாக நடிக்கவிருக்கிறார்களாம்.
இவருடைய தயாரிப்பில், இறுதிச்சுற்று, விக்ரம்வேதா ஆகிய படங்களில் மாதவன் நடித்திருக்கிறார்.
அதேபோல் இவருடைய தயாரிப்பில் காதலில் சொதப்புவது எப்படி?, காவியத்தலைவன் ஆகிய படங்களில் சித்தார்த் நடித்திருக்கிறார்.
அதனால், இவர்கள் இருவருக்கும் சசிகாந்த் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் அவர் இயக்கும் படத்தில் நடிக்கச் சம்மதம் சொல்லியிருக்கிறார்களாம்.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
தயாரிப்பாளராக வெற்றி பெற்ற சசிகாந்த், இயக்குநராகவும் வெற்றி பெறுவார் என்று அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
நல்லதுதான்.