December 18, 2025
சினிமா செய்திகள்

எல் ஐ கே வெளியீடு மீண்டும் தள்ளிப்போவது ஏன்? – புதிய தகவல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் எல்ஐகே.இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படம் முதலில் செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்பின் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.அவ்விரு தேதிகளிலும் படம் வெளியாகவில்லை.

அடுத்து, டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.இப்போதுவரை அந்த அறிவிப்பில் எந்த மாற்றத்தையும் படக்குழு அதிகாரப்பூர்வமாகச் சொல்லவில்லை.

ஆனால்,அந்தத் தேதியில் படம் வெளியாகாது என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது.

அதற்குக் காரணம் என்ன?

இப்படத்தின், திரையரங்க வெளியீட்டுக்குப் பின்னான டிஜிட்டல் ரைட்ஸ் எனப்படும் இணைய ஒளிபரப்பு மற்றும் தொகா ஒளிபரப்பு உரிமைகள் விற்பனையாகவில்லை.

இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து முதல்பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்திருக்கும் இயக்குநர் விக்னேஷ்சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்,இப்படத்தின் இணைய ஒளிபரப்பு மற்றும் தொகா ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை எடுத்துக் கொண்டதாம்.

சுமார் இருபது கோடி மதிப்பிட்டு அந்த உரிமைகளை விக்னேஷ் சிவன் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில்,படத்தை வெளியிடும் நேரத்தில் கடைசிக்கட்டத் தேவைக்காக அந்தத் தொகை தேவைப்படுகிறது.அதைக் கொடுங்கள் படத்தை வெளியிட்டுவிடலாம் என்று லலித்குமார் கேட்டாராம்.

அதற்கு, எங்களுக்கே அந்தத் தொகை முழுமையாக வந்து சேரவில்லை.கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வரும்.எனவே பணம் வரும்போது உங்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்,நீங்கள் முழுப்பொறுப்பெடுத்து படத்தை வெளியிடுங்கள் என்று விக்னேஷ்சிவன் சொல்லியிருக்கிறார்.

இதை,லலித்குமார் ஏற்கவில்லையாம்.கடைசிநேரம் கொடுக்க வேண்டிய தொகை என்னிடம் இல்லை.நீங்கள் கொடுப்பீர்கள் என நம்பித்தான் படவெளியீட்டை அறிவித்தேன் என்று சொல்லியிருக்கிறார்.அதோடு நீங்கள் எப்போது பணம் தருகிறீர்களோ அப்போதுதான் படத்தை வெளியிட முடியும் என்றும் சொல்லிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை ஒரு தீர்வுக்கு வராமல் இழுத்துக் கொண்டே இருப்பதால்தான் பட வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் உலவுகின்றன என்று சொல்லப்படுகிறது.

Related Posts