குட்பேட்அக்லியில் கமல் பாடல் இடம்பெற்றது எப்படி? – சுவையான கதை

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்’குட் பேட் அக்லி’.இப்படத்தில் அஜீத்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்,யோகிபாபு, பிரபு உட்பட பலர் நடித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்தப்படத்தில் அஜீத்தின் இரண்டு சண்டைக் காட்சிகளின் போது பின்னணி இசைக்குப் பதிலாக பழைய பட பாடல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.இதற்கு அஜீத் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சியின் போது எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இளையராஜா இசையில் வாலி எழுதிய இளமை இதோ இதோ என்கிற பாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இரண்டாம் பாதியில் வரும் ஒரு சண்டைக்காட்சியின் போது அஜீத்தின் வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அஜீத் மட்டுமின்றி வில்லனாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் நடனமாட இரண்டு பழையபட பாடல்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.
அவற்றில் ஒன்று…
தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் கஸ்தூரி ராஜாவே எழுதிய ஒத்த ரூபா தாரேன் என்கிற பாடல் நாட்டுப்புறப்பாட்டு என்கிற படத்தில் இடம்பெற்றிருந்தது.
இன்னொன்று…
மம்முட்டி,நெப்போலியன்,சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் ரமணி இயக்கத்தில் வெளியான படம் எதிரும் புதிரும்.1999 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
அப்படத்தில் தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா என்கிற பெரும் வரவேற்புப் பெற்ற பாடல் உண்டு.வைரமுத்து எழுதிய அப்பாடலுக்கு நடன இயக்குநர் ராஜுசுந்தரமும் சிம்ரனும் நடனமாடியிருப்பார்கள்.
இந்தப் பாடலுக்கு அர்ஜூன் தாஸும் பிரியாவாரியரும் நடனமாடியிருக்கிறார்கள்.
இவற்றில்,கமல் நடிப்பில் வெளியான இளமை இதோ இதோ பாடலை அஜீத்தின் சண்டைக்குப் பயன்படுத்தியிருப்பது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
முதலில், அஜீத் நடிக்கும் இரண்டு சண்டைக் காட்சிகளுக்கும் அஜீத்தின் பழைய பாடல்களையே பயன்படுத்துவது என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.
படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிக்காகப் பயன்படுத்தப்பட்ட பாடல்,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜீத் நடித்திருந்த தீனா படத்தில் இடம்பெற்றிருக்கும் வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல்தானாம்.பாடலாசிரியர் வாலி எழுதிய அந்தப்பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
அந்தப் பாடலைப் பயன்படுத்தி படப்பிடிப்பும் நடத்தப்பட்டுவிட்டதாம்.ஆனால் அப்பாடலைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் கடைசி நேரத்தில்,இந்த சண்டைக் காட்சிக்குப் பொருத்தமாக இருக்கவேண்டும் என்று பல பாடல்களைத் தேடியிருக்கிறார்கள். கடைசியில் பாடலாசிரியர் வாலியே இயற்றிய சகலகலா வல்லவன் படப் பாடல் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து பயன்படுத்திக் கொண்டார்களாம்.
இப்போது அந்தப் பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.