வாடிவாசல் படம் நடக்கும் – சந்தேகம் தீர்த்த வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படம் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிப்பு.ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு, ஜி.வி பிரகாஷ்குமார் இசை, கலை இயக்கம் ஜாக்கி என்றும் சொல்லப்பட்டிருந்தது.
சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார்.
சூர்யாவின் பிறந்தநாளையொட்டி 2020 சூலை 23 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்நிலையில், வாடிவாசல் படத்தில் சூர்யா இல்லை, வேறு கதாநாயகனை விரைவில் அறிவிப்போம் என்று கலைப்புலிதாணு பெயரிலான ஒரு ட்விட்டர் கணக்கில் செய்தி வெளியானது.
உடனே அதை மறுத்த கலைப்புலிதாணு, அது போலிக் கணக்கு அதில் வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்று சொன்னார்.
அதோடு,நவம்பர் 28,2020 அன்று எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும்
என்று சொல்லியிருந்தார்.
அதன்பின் அப்படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
இந்நிலையில், கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்கு தேசியவிருது கிடைத்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மார்ச் 23) நடந்தது.
அந்நிகழ்வில் வெற்றிமாறன் பேசும்போது,
அசுரன் படத்தின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்துவிட்டதால் அதைக் கடைபிடித்தாகவேண்டுமே என்று
வலுக்கட்டாயமாக வேலை செய்தேன். திருப்தியில்லாமல் வேலை செய்தேன்.படம் வெற்றி பெற்றதால் அதிலுள்ள குறைகள் மன்னிக்கப்பட்டுவிட்டன.இந்நிலையில், இப்போது, நீங்கள் படம் தயார் என்று சொன்னதும்தான் வெளியீட்டுத் தேதி சொல்வேன் என்று தாணு சார் சொல்லியிருக்கிறார் என்ற வெற்றிமாறன், அங்கிருந்த கலைப்புலிதாணுவைப் பார்த்து, சார் நல்ல ரிலீஸ் டேட் இருந்தா சொல்லுங்க அதற்கேற்ப வேலை செய்வோம் என்றார். உடனே கலைப்புலி தாணு எழுந்து நின்று வெற்றிமாறனுக்கு வணக்கம் சொன்னார்.
படத்தின் பெயர் சொல்லாமல் இவர்கள் பேசினாலும் இது வாடிவாசல் படம் பற்றிய தகவல்தான் என்றும் இதன்மூலம் வாடிவாசல் படம் நடக்குமா? என்கிற சந்தேகம் நீங்கி நிச்சயம் அந்தப்படம் நடக்கும் என்கிற நம்பிக்கை பிறந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.











