சினிமா செய்திகள்

தக்லைஃப் படத்துக்குத் தடையா? கன்னடப்படங்கள் இங்கு வெளியாகாது – எதிர்ப்புக்குரல்கள்

தக் லைஃப்’ படத்தின் விளம்பர நிகழ்வின் போது, “கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது” என்று நடிகர் கமல்ஹாசன் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை தூண்டியது. இதையடுத்து அவர் நடித்துள்ள தக் லைஃப் படத்திற்கு தடை விதிப்பதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளனம் அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து தனது படத்தின் வெளியீட்டிற்குப் பாதுகாப்பு கோரி கமல்ஹாசன், கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, மொழி குறித்துப் பேச கமல்ஹாசன் என்ன மொழி ஆய்வாளரா? இல்லை, வரலாற்று ஆய்வாளரா? பொதுவெளியில் ஒரு பிரபலமான நபர் இப்படிப் பேசலாமா? ஒரு மன்னிப்பு கேட்டிருந்தாலே இந்த பிரச்னை. நீர், நிலம், மொழி இவை மூன்றுமே குடிமக்களுக்கு முக்கியமானது என்றும் மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.நீங்கள் மன்னிப்புக் கேட்கவில்லையென்றால் கர்நாடகாவில் உங்கள் படம் ஓட வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள். கருத்துச் சுதந்திரம் மக்களின் மனதினைப் புண்படுத்துவதற்காக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மன்னிப்புக் கேளுங்கள், அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் கர்நாடகாவிலிருந்தும் சில கோடிகளை சம்பாதிக்க விரும்புகிறீர்கள்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மொழி குறித்த தனது பேச்சுக்கு கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பின்னர் மனு விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை பிற்பகல் 2.30 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதற்கிடையே, கர்நாடக ஃபிலிம் சேம்பர் தலைவர் நரசிம்மலுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். அதில், கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை. கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கன்னடர்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்து இருக்கும் அன்பு மீது மிகுந்த மரியாதை உண்டு. கன்னடம் குறித்த எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வழக்கு பிற்பகல் 2.30 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசன் கடிதம் திருப்தியாக உள்ளது; ஆனால் அதில் ஒரு வார்த்தையைச் சேர்க்க வேண்டும். அதாவது கமல்ஹாசனின் கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தை விடுபட்டுள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். மேலும், மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது கமல் தரப்பில், நாங்கள் கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். இந்தப் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்கத் தயாராக இருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கர்நாடக உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதன்மூலம் ஜூன் 5 ஆம் தேதி கர்நாடகாவில் தக்லைஃப் வெளியாகாது என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில்,தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

கர்நாடகாவில் இதுவரை தமிழர்களுக்கு நீர் தான் மறுக்கப்பட்டு வந்தது. இப்போது நீதியும் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதி நாகபிரசன்னா கடந்த கால வரலாற்றை மறந்து விட்டுப் பேசியுள்ளார்.

கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழித் திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியாகத் தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரும் கன்னடத் திரைப்படமும் வெளியாகாது.

அதே நேரத்தில், தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள சங்கங்கள் முன்வந்து, கர்நாடகாவில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.அப்படி இல்லையென்றால், தமிழ்த் திரைப்படங்களில் கன்னட நடிகர்களையோ, தொழில்நுட்பக் கலைஞர்களையோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மாபெரும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விவகாரத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், கர்நாடகத் தமிழர்களின், தமிழ்நாட்டு தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்வினையாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையோடு கூறிக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இதே கருத்தைக் கூறியிருந்தார்.விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்டோரும் இச்சிக்கலில் கர்நாடகத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.இது மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts