சினிமா செய்திகள்

பக்கிரி படத்துக்கு இவ்வளவு திரையரங்குகளா?

தனுஷ் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் தனுஷ் படமொன்று மார்ச் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

தனுஷ் நடிப்பில் ஆங்கிலம் மற்றும் ப்ரெஞ்ச் ஆகிய மொழிகளில் உருவான படம் ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’.ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கிய படம்.

இப்படம், இந்தியாவில் இருந்து பாரிஸ் செல்லும் ஒரு தெருக்கூத்துக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய பதிவு. இப்படத்தை 2018 ஆம் வருடம் மே மாதம் உலகம் முழுவதும் திரைக்குக் கொண்டு வந்தனர்.

அதன்பின் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இப்படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட்டது.தமிழில் இப்படத்துக்கு பக்கிரி என்று பெயரிட்டு வெளியிட்டனர்.

அப்போது கொரோனா சிக்கல் தொடங்கியதால் திரையரங்குகள் இயங்கவிலா நிலை ஏற்பட்டது.அதனால் இப்படம் அப்போது ஓடவில்லை.

அதனால், இந்தப்படத்தை மீண்டும் இப்போது வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். மார்ச் 22 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஏ.பி.இண்டர்நேசனல் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

ஏனோதானோவென்று வெளியிடாமல் முதன்முறை ஒரு புதியபடத்தை வெளியிடுவதுபோல் மிகச் சிரத்தையாக வெளியீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

படத்தை வெளியிடுபவர்கள் மட்டும் ஆர்வமாக இருந்தால் போதுமா?விநியோகஸ்தர்களும் திரையரங்கினரும் ஆர்வம் காட்டினால்தானே வெளியிட முடியும்.

ஒரு படத்தைத் திரும்ப வெளியிடுவதில் பெரிதாக ஆர்வம் காட்டமாட்டார்கள். ஆனால் இப்படத்தைத் தமிழ்நாடெங்கும் வெளியிட எல்லா விநியோகப்பகுதிகளிலும் முன்னணி விநியோகஸ்தர்கள் முன்வந்தனர். அதோடு, பக்கிரி படத்துக்கு திரையரங்குத் தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஒவ்வொரு பகுதியாகத் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்துவிட்டு கடைசியில் பார்த்தால் மொத்தம் சுமார் நூற்றிருபது திரையரங்குகள் வந்திருக்கின்றனவாம்.

திரும்ப வெளியாகும் ஒரு படத்துக்கு இவ்வளவு திரையரங்குகள் கிடைத்திருப்பது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

விநியோகஸ்தர்கள், திரையரங்குகள் ஆகிய இடங்களில் கிடைத்த வரவேற்பு இரசிகர்களிடமும் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறது படக்குழு.

Related Posts