சூர்யாவின் வாடிவாசல் பற்றிய வதந்தியும் மறுப்பும்
சூர்யாவின் 40 ஆவது படத்தை பாண்டிராஜ் இயக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு முன்பே சூர்யா 40 படத்தை வெற்றிமாறன் இயக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப்படத்தின் பெயர் வாடிவாசல்.கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்கம் ஜாக்கி என்றும் சொல்லப்பட்டிருந்தது.
சனவரி 11,2020 அன்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், சூர்யாவுடன் இணையும் அடுத்த திரைப்படத்தின் பெயர் ‘வாடிவாசல்’ என்பதை அறிவித்தார்.
சூர்யாவின் பிறந்தநாளையொட்டி சூலை 23 அன்று வாடிவாசல் படத்தின் முதல்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர்.
அதன்பின் சூர்யாவின் 40 ஆவது படம் என்பது மாறிவிட்டது பற்றி வாடிவாசல் குழுவினரிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.
அதுமட்டுமின்றி அடுத்து சூர்யா நடிக்கவிருப்பது பாண்டிராஜ் படத்தில்தான் என்றும் சொல்லப்படுகிறது.
இயக்குநர் வெற்றிமாறனும் பாரதிராஜா நடிக்கும் புதிய படத்தை இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வாடிவாசல் படத்தில் சூர்யா இல்லை, வேறு கதாநாயகனை விரைவில் அறிவிப்போம் என்று கலைப்புலிதாணு பெயரிலான ஒரு ட்விட்டர் கணக்கில் செய்தி வெளியானது.
உடனே அதை மறுத்த கலைப்புலிதாணு, அது போலிக் கணக்கு அதில் வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்று சொன்னார்.
அதோடு நேற்று இரவு எட்டு மணிக்கு (நவம்பர் 28,2020), எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும்
என்றும் அறிவித்துள்ளார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படத்தை விட்டுவிட்டு இயக்குநர் வேறொரு புதிய படத்துக்கும் நடிகர் வேறொரு புதிய படத்துக்கும் போவது ஏன்? என்கிற கேள்விக்கு யாரிடமும் எந்தப்பதிலும் இல்லை.











